புல்டோசரால் மசூதியை இடித்து தள்ளிய முஸ்லீம்கள்.. என்ன காரணம்?
உத்தரபிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட ஒரு மசூதியை, அம்மசூதியை நிர்வகிக்கும் குழுவினரே புல்டோசர் கொண்டு இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ரயா புஜுர்க் கிராமத்தில் இந்த மசூதி கட்டப்பட்டிருந்தது. இந்த கட்டிடம் 'சட்டவிரோதமானது' என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து, அதனை அகற்ற கோரி சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து, மசூதி கமிட்டி தாங்களாகவே முன்வந்து இடிக்கும் பணியை மேற்கொள்வதாகவும், அதற்கு நான்கு நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரியது.
கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், முதலில் சுத்தி மற்றும் கடப்பாறைகள் மூலம் இடிப்பு பணி தொடங்கியது. எனினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியை முடிக்க வேண்டியிருந்ததால், கடைசி நாளான நேற்று புல்டோசரை பயன்படுத்தி அந்த கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
குறித்த கால அவகாசத்திற்குள் மசூதியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் முஸ்லிம்கள் குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தனர். முன்னதாக, இதே பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஒரு திருமண மண்டபம் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காவல்துறையினர் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran