வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2016 (14:35 IST)

மோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு!

மோசடி சாமியார்களுக்கு சாமரம் வீசும் மோடி அரசு என்று தீக்கதிர் நாளிதம் தலையங்கம் வெளியிட்டுள்ளது.


 

அதன் குறிப்பிடத்தக்க விஷயங்கள் பின்வருமாறு:

கார்ப்பரேட் சாமியார்களின் மோசடிகளுக்கு தொடர்ந்து மத்திய, மாநில அரசு நிர்வாகம் துணைபோகும் அவலம் அரங்கேறி வருகிறது

குறிப்பாக மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கார்ப்பரேட் சாமியார்களின் ஆட்டம் அதிகரித்து வருகிறது. சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? சாமியார்களின் ஆட்சி நடக்கிறதா? என்கிற அளவுக்கு சாமியார்களின் மோசடி அதிகரித்து வருகிறது.

கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஆக்கிரமித்து மையம் கொண்டிருக்கிறது ஈஷா யோகா மையம். இதன் நிறுவனராக இருக்கும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரமே அத்தனைக்கும் ஆசைப்படு. அதன் படி அவர் அரசின் சொத்திற்குமட்டுமல்ல, அடுத்தவரின் சொத்திற்கும் ஆசைப்படுவதுதான் வழக்கம்.

அது சட்ட விதிமுறைகளை மீறுவதாக இருந்தாலும் சரி, சாமானிய மக்களின் உரிமைகளை பறிப்பதாக இருந்தாலும்சரி, அடுத்தவர் குழந்தைகளை அபகரிப்பதாக இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவரது ஒரே குறிக்கோள் அத்துணையும் தன்னுடைமையாக மாற வேண்டும் என்பதே ஆகும்.

கோவை ஈஷா மையம் அருகே பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்கு பகிர்ந்தளிக்க பட்ட 44. 30 ஏக்கர் நிலம் இருந்தது. அதன் மீது ஆசைப்பட்ட ஜக்கி வாசுதேவ் ஆளும் அதிகார வர்க்கத்தின் ஆசியோடு ஆக்கிரமித்துக் கொண்டார்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார வர்க்கத்தினர் மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவிடம் ஆசிவாங்க அணி வகுத்து நிற்கின்றனர். குறிப்பாக மத்திய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வாரத்திற்கு ஒருவர் வீதம் ஈஷா யோகா மையத்திற்கு வந்து ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

அண்மையில் கூட ஸ்மிருதி இரானி வந்ததோடு மட்டுமல்ல, அரசு அனுமதியின்றி நடைபெற்று வரும் கட்டுமானப் பணியின் ஒரு பகுதியாக மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் ஆதியோகி சிலையை படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டிருந்தார். இதுதான் இவர்களின் லட்சணம்.

கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் உள்ளிட்டவர்களின் அனைத்து மோசடித்தனங்களுக்கும் ஆர்எஸ்எஸ் வழி நின்று மோடி அரசு ஆசி வழங்கியே வருகிறது.

உலக கலாச்சார விழா என்ற பெயரில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பிற்கு ரூ. 120 கோடி அபராதம் விதிக்க வல்லுநர் குழு பரிந்துரைத்திருக்கிறது.

ஆனால் அந்த பரிந்துரை கிணற்றில் போட்டகல்லாக இருக்கிறது.பாபாராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவன பொருட்களை விளம்பர தர நிர்ணய விதிமுறைகளை மீறி விளம்பரப்படுத்தியது குறித்து இந்தியதர நிர்ணய கவுன்சில் 27 முறை நோட்டீஸ் அனுப்பிருக்கிறது.

ஆனால் அவரோ அரசு நிர்வாக அமைப்பையே நேரடியாக மிரட்டுகிறார். அதே சமயம் அவருடன் அருகில் நின்று பிரதமர் மோடி போஸ் கொடுக்கிறார். பிரதமர் நீதி நிர்வாகத்தின் பக்கம் இருக்கிறாரா அல்லது கார்ப்பரேட் மோசடி சாமியார்களின் பக்கம் நிற்கிறாரா என்பதை விளக்க வேறென்ன வேண்டும்?