1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2015 (11:34 IST)

”மேகியை திரும்பவும் கடைகளுக்கு கொண்டுவருவதுதான் முதல் நோக்கம்” - நெஸ்லே இந்தியா

மேகியை திரும்பவும் கடைகளுக்கு கொண்டுவருவதுதான் எங்களது முதல் நோக்கம் என்று நெஸ்லே இந்தியாவிற்கான புதிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
 

 
நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் ரசாயணப் பொருட்கள் அளவிற்கு அதிகமாக இருப்பதாக கூறி மேகி நூடில்ஸிற்கு தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த தடையை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் புதிய இயக்குநராக பொறுப்பெற்றுள்ள சுரேஷ் நாராயணன் கூறுகையில், ”மேகியை திரும்பவும் கடைகளுக்கு கொண்டுவருவதுதான் என் முதல் நோக்கம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். நெஸ்லே நிறுவனம் இந்தியாவுடன் ஒன்று கலந்துவிட்ட ஒன்று.
 
100 ஆண்டுகளாக இந்தியாவில் அதன் சட்ட திட்டங்களை மதித்து நடந்து வருகிறோம். வருங்காலத்திலும் அப்படியே இருப்போம். இந்த விவகாரம் எங்களுக்கு ஒரு படிப்பினை ஆகும். இதுபோல எதிர்காலத்தில் வராமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.