முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்: மத்தியபிரதேசத்தில் பரபரப்பு
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் சற்று முன்னர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் இதனை அடுத்து 15 மாத காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது
மத்திய பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும் அவர் தனது மெஜாரிட்டியை சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி நிரூபிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பளித்தது. இதன்படி முதல் அமைச்சர் கமல்நாத் இன்று தனது மெஜாரிட்டியை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது
இந்த நிலையில் முதலமைச்சர் கமல்நாத் இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
15 மாதத்திற்கு முன்னர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி மத்திய பிரதேசத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அந்த ஆட்சி கவிழ்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விரைவில் மத்தியபிரதேச ஆளுனர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது