1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2016 (08:14 IST)

லோக்பால் மசோதா விவகாரம்: மத்திய அரசை கண்டித்து அன்னா ஹசாரே போராட்டம் அறிவிப்பு

லோக்பால் மசோதா நிறைவேற்றுவதில் மத்திய  அரசு மெத்தனமாக செயல்படுவதாகக் கூறியுள்ள  அன்னா ஹசாரே, இதை கண்டித்து 30 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார்.


 

 
அன்னா ஹசாரே தன்னுடைய சொந்த ஊரான ராலேகான் சித்தியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அன்னா ஹசாரே கூறியதாவது:-
 
லஞ்ச, ஊழலை தடுக்கும் லோக்பால் மசோதா விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து ஏற்கனவே நான் மேற்கொண்ட போராட்டங்களில் பங்கேற்ற 7 மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசினேன்.
 
லோக்பால் மசோதா நிறைவேற்றும் விவகாரத்தில், மத்திய அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து வருகிற 30 ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளளேன்.
 
இந்த மசோதாவை பொறுத்தவரையில், அரசின் தாமதப்படுத்தும் தந்திரம், அதன் நோக்கம் மற்றும் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்துள்ளது.
 
அரசியலில் நடுநிலை வகிக்கும் சமூக ஆர்வலர்கள், டெல்லியில் நடைபெறும் அமைதி போராட்டத்தில் கலந்து கொள்ளலாம். இதற்கு நான் தார்மீக ஆதரவு தெரிவிக்கிறேன். 
 
ஆரம்பத்தில் டெல்லி ஆம் ஆத்மி அரசால் முன்மொழியப்பட்ட லோக்பால் மசோதா, பலவீனமாக இருந்தது. என்னுடைய குறுக் கீட்டை தொடர்ந்து, அந்த மசோதா வலுவானதாக மாற்றப்பட்டது.
 
நான் பரிந்துரைத்த 4 உட்பிரிவுகளும் அத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தொடக்கத்தை நாம் வரவேற்க வேண்டும். மசோதா நிறைவேறும் சமயத்தில், அதில் தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
 
கெஜ்ரிவால் நேர்மையானவர், வெளிப்படையானவர். அரசியலின் தார்மீக மதிப்புகளுக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார்.
 
ஒரு முதலமைச்சராக அவர் எந்தவொரு தவறான முடிவையும் எடுத்ததை நான் பார்த்தது இல்லை. அரசியல் மீதான சாமானிய மனிதனின் எண்ணத்தை அவர் மாற்றிக் காட்டிவிட்டார்.
 
பணபலத்தில் இருந்து அரசியல் விடுபட்டிருப்பதை பார்க்க நான் விரும்புகிறேன். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மரியாதை இல்லை என்பதை என்னால் ஏற்க முடியாது. 
 
சத்தியாகிரகத்தை மேற்கொள்வது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது அல்ல. அமைப்பு முறைகளை மாற்றுவதற்காக நக்சலைட்டுகளை போல், வன்முறையை கெஜ்ரிவால் தூண்டியதில்லை.
 
டெல்லி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒற்றை, இரட்டைப்படை வாகன எண் முறை மாசுபாட்டையும், போக்குவரத்து நெருக்கடியையும் குறைப்பதால் பாராட்டுக்கு உரியது. இதை அனைத்து பெரிய நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். என்று அன்னா ஹசாரே கூறினார்.