செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (15:29 IST)

கடை திறந்த முதல் நாளே 100 கோடி வசூல்! – சரக்கு தீர்ந்ததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம்!

மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கூட்டம் குவிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கினால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மதுக்கடைகள் முன்பு மது பிரியர்கள் கூட்டமாய் குவிவதால் சமூக இடைவெளியை பேணுவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில் காலை முதலே பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை அமைத்து காத்திருந்து பலர் மது வாங்கி சென்றுள்ளனர். வழக்கமாக 60 முதல் 70 கோடி வரை மட்டுமே விற்பனையாகும் மது நேற்று ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்று அதிகமுள்ள லக்னோ பகுதியில் மட்டும் ரூ.6.3 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. மக்கள் கூட்டத்தால் மதிய வேளையிலேயே மது வகைகள் முழுவதும் விற்று தீர்ந்ததால் மது பிரியர்கள் பலர் ஏமாற்றத்தோடு வீடு திரும்பியுள்ளனர்.