கேரள மக்கள் எக்காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள் - அச்சுதானந்தன்
கேரள மக்கள் எந்த காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். இதனால்தான் பாஜகவால் கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை. அதேசமயம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் கேரளாவில் மட்டும் பாஜகவின் வெற்றி பறிபோய்விட்டது. அங்குள்ள 20 நாடாளுமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரசும், 8 தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சியும் கைப்பற்றின.
பாஜகவால் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை. பாஜகவின் இந்த தோல்வி பற்றி கேரள முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அச்சுதானந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:–
கேரள மக்கள் எந்த காரணம் கொண்டும் மதவாதத்தை ஆதரிக்க மாட்டார்கள். இதனால்தான் பாஜக கேரளாவில் கால் ஊன்ற முடியவில்லை. அதே சமயம் எங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. ஆனால் தற்போது நடந்துள்ள தேர்தலில் நாங்கள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இரு மடங்கு வெற்றியை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளார்கள். ஆனாலும் இதைவிட அதிக தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அதற்காக தொடர்ந்து நாங்கள் பாடுபடுவோம்.
இவ்வாறு அச்சுதானந்தன் தெரிவித்தார்.