வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (14:25 IST)

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுமா இந்திய பொருளாதாரம்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில், மறைமுகமாக பொருளாதார வீழ்ச்சிகளையும் பல நாடுகள் சந்திக்கக்கூடிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரி சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தென்கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் என பல நாடுகளுக்கு தொடர்ந்து பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் 2036 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 52 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் 3,117 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகளில் பங்கு சந்தை புள்ளிகள் சரிவை கண்டுள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆசிய கூட்டமைப்பான பிரிக்ஸின் வணிக தொடர்புகள் உலகளவில் 18வது பெரும் வர்த்தகம் ஆகும். அதில் இந்தியா உலகில் உள்ள பல நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சீனாவிலிருந்து இந்தியாவிற்கு பல எலெக்ட்ரானிக் உபகரணங்கள், அச்சடிக்க பயன்படும் பேப்பர்கள், இரும்பு மற்றும் இரும்பு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவை இறக்குமதியாகின்றன. மேலும் சீனா மற்றும் பல நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து உணவு பொருட்கள், பழங்கள், காட்டன், உப்பு, சிமெண்ட், காப்பர் முதல் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

இந்நிலையில் சீனாவுடனான எல்லைகளை இந்தியா மூடிக் கொள்வது என்பது வர்த்தக பரிவர்த்தனைகளையும் அடக்கியது ஆகும். முக்கியமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உணவுப்பொருட்கள், பழங்கள் போன்றவற்றிற்கு கடும் கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இறக்குமதி பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்யும் வியாபாரிகள் போதிய இருப்பு இல்லாமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். மேலும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியும் செய்ய முடியாத சூழலில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் நாட்கணக்கில் கிடங்குகளில் கிடக்க வேண்டி வரலாம்.

இதுபோன்ற மறைமுகமான காரணங்களால் இந்தியாவில் பொருளாதாரத்தில் கொரோனாவின் தாக்கம் பிரதிபலிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் இந்தியாவின் ஏற்றுமதிகள் அதிகமாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன்தான் எனும்போது இந்த நிலையை சமாளிக்க முடியலாம். ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் சீனாவிலிருந்து கொரோனா பரவியது என்பதை விடவும் ஆசிய கண்டத்திலிருந்து பரவியது என்பதுதான் உயர்த்தி காட்டப்படும் செய்தியாக இருக்கிறது. இதனால் இந்தியாவின் உணவு ஏற்றுமதி மீது ஐரோப்பிய நாடுகளுக்கு சிறு தயக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் உலகளாவிய வணிகத்தில் கொரோனாவின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை என்றாலும், தொடர்ந்து கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டால் அது மற்ற பரிவர்த்தனைகளை விடவும் உலகளாவிய உணவு மற்றும் உணவுப் பொருட்கள் பரிவர்த்தனையை மிகவும் பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர். முக்கியமாக உணவு மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தியாவுக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தலாம்.