மனைவி, மகள்களை வீட்டுக்குள் பூட்டி தீ வைத்த விவசாயி.. 6 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்..!
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஒரு விவசாயி தன் வீட்டுக்கு தானே தீ வைத்துக்கொண்டதில், இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மௌரியா என்ற விவசாயி, சமீபத்தில் கிராமத்தில் இருந்து இரண்டு குழந்தைகளை தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன் பின்னர், கோடாரியால் அவர்களை தாக்கி, பிறகு தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சேர்த்து அனைவரையும் வீட்டுக்குள் பூட்டியுள்ளார்.
பின்னர் மௌரியா வீட்டை கொளுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் வீட்டுக்குள் இருந்த ஆறு பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பலியானவர்களில் விஜய் மௌரியா, அவரது மனைவி, அவர்களின் இரண்டு இளம் மகள்கள், மற்றும் வீட்டிற்கு வந்திருந்த இரண்டு குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. தனது சொந்த குடும்பத்தையும் தன்னையும் அழித்து கொண்ட இந்த விவசாயியின் செயல் அந்த பகுதியில் மர்மமாக உள்ளது.
இந்தத் தீ விபத்தில் வீடு மட்டுமின்றி, வீட்டுக்குள் இருந்த பொருட்கள், வீட்டை சுற்றியும் கட்டப்பட்டிருந்த கால்நடைகள் மற்றும் உடமைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீட்டுக்குள் இருந்த ஒரு டிராக்டர் மற்றும் கால்நடைகளும் தீயில் எரிந்தன. கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீ மிக வேகமாக பரவியதால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பின்னர், காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
உயிரிழந்த ஆறு பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. மேலும், விசாரணையை முன்னிட்டு அந்த பகுதி காவல்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மேலும் பலர் வீட்டுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டாலும், கூடுதல் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Edited by Siva