ஜாபர் சாதிக்கிடம் ED விசாரிக்க அனுமதி..! டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!
போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்கள் கடத்தப்படுவதாக டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினர்.
அப்போது போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரு. 2000 கோடி என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இதை அடுத்து ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.