1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2016 (11:11 IST)

வடகிழக்கு இந்தியாவில் 6.7 ரிக்டர் அளவு நில நடுக்கம் : இருவர் பலி

வட இந்தியாவில் நிலநடுக்கம்

வட கிழக்கு இந்தியாவில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இதுவரை 30 பேர் படு காயம் அடைந்துள்ளனர்.


 

 
இன்று காலை மியான்மர், வங்காளதேசம் மற்றும் பூட்டான் ஆகிய பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நிலநடுக்கத்திற்கு இருவர் பலியாகியினர். மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இம்பாலுக்கு மேற்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் 57 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று காலை 4:30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு, காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பல வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழுந்துள்ளது. சில மருத்துவமனைகளும் சேதம் அடைந்துள்ளது.  
 
மேலும் மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பகுதிகளிலும் நில நடுக்கத்தின் அதிர்வு உணரப்பட்டது. அங்கு வசித்த மக்கள், அச்சத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 
 
பிரதமர் மோடி அருணாச்சல பிரதேச முதலமைச்சர் நபம் துகியிடமும், அசாம் முதலமைச்சர் தருண் கோகோயிடமும் தொலைபேசியில் பேசி, அங்குள்ள நிலைமைகளை கேட்டறிந்தார். மேலும் கவுகாத்தியில் இருந்து தேசிய பேரிட மேலாண்மை படை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இதுபற்றி விவாதித்ததாகவும், நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமைய கண்காணிக்கவும் கேட்டுக் கொண்டதாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.