எய்ட்ஸ் ரத்தம் ஏற்றிய ஊசியை செலுத்த ஊழியரை துரத்திய மருத்துவர்...
தனக்கு பணி ஒதுக்கப்படாததால் எய்ட்ஸ் ரத்தம் நிரப்பிய ஊசியை, உடலில் செலுத்த மருத்துவ கண்காணிப்பாளரை விரட்டிய மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் புரோட்டுடூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ராஜு. அதே மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் மருத்துவர் லட்சுமி பிரசாத். ராஜுக்கு பணி ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், கையில் ஒரு ஊசியுடன் மருத்துவர் லட்சுமியின் அறைக்கு சென்ற ராஜு, அந்த ஊசியை அவரின் உடலில் ஏற்ற முயன்றுள்ளார். அதை கவனித்துவிட்ட மருத்துவ ஊழியர்கள் அவரை தடுத்துள்ளனர். ஆனாலும், எப்படியாவது அந்த ஊசியை லட்சுமியின் உடலில் ஏற்றிவிட துடித்த ராஜூ அவரை விரட்டி சென்றுள்ளார்.
ஆனால், அங்கிருந்து மருத்துவ ஊழியர்கள் அவரை பிடித்து ஊசியிலிருந்த ரத்தத்தை வெளியேற்றினர். அதன்பின் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடம் இருந்த எடுத்த ரத்தத்தை ஊசியில் ஏற்றி, மருத்துவர் லட்சுமியின் உடலில் செலுத்த ராஜு முயன்றுள்ளார் என்பதும், தனக்கு பணி ஒதுக்காமல் மருத்துவர் லட்சுமி ஓரங்கட்டியதால் கோபமடைந்த ராஜு அவரை பழிவாங்கவே இந்த செயலில் இறங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மருத்துவர் ராஜூவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.