1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (13:38 IST)

சசிகலாவுக்கு தனி சமையல் அறை ; நானே நேரில் பார்த்தேன் - டிஐஜி ரூபா பேட்டி

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, கர்நாடக சிறைத்துறை டிஜஜி ரூபா கூறியுள்ளார்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத்தண்டனை பெற்று, தற்போது பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு, தனி சமையலறை உட்பட பல வசதிகளை சிறைத்துறை டிஜிபி சத்தியநாரயணா செய்து கொடுத்துள்ளார் எனவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கை மாறியுள்ளது எனவும், சிறைத்துறை டிஐஜி ரூபா இன்று புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் கர்நாடக மாநில டிஜிபி தத்தாவுக்கு அனுப்பியுள்ளார். 
 
இந்த விவகாரம் தமிழகம் மற்றும் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை டிஜிபி சத்தியநாராயணா மறுத்துள்ளார். 
 
இந்நிலையில், செய்தியாள சந்திப்பில் பேசிய டிஐஜி ரூபா “ இது தொடர்பாக நான் உயர் அதிகாரி தத்தாவிற்கு அறிக்கை சமர்பித்துள்ளேன். அதுபற்றி என்னால் விரிவாக பேச முடியாது. யாருக்கும் எதிராக இந்த புகாரை நான் அனுப்பவில்லை. சிறையில் ஆய்வு செய்த போது நான் என்ன பார்த்தேனோ அதைத்தான் அனுப்பியுள்ளேன்.
 
சசிகலாவிற்கு தனி சமையல் அறை இருப்பதையும், அவருக்கு ஒரு பெண் கைதியை சமையல் செய்து கொடுக்க அதிகாரிகள் நியமித்திருப்பதையும் நான் நேரில் பார்த்தேன்.  மற்றவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான் இந்த புகாரை கூறவில்லை. நான் அளித்த அறிக்கையில் தவறு இருந்தால் இதுகுறித்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன்.
டிஜிபி சத்தியநாராயணாவிற்கும், எனக்கும் தனிப்பட்ட பிரச்சனை எதுவுமில்லை. சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. உரிய விசாரணைக்கு பின்பே டிஜிபி தத்தாவிற்கு அறிக்கை அனுப்பினேன்.
 
என் மீதே ஊழல் புகார் சுமத்துகிறார்கள். இணையத்தில் என்ன பற்றிய தகவல்களை தேடி பாருங்கள் என் மீது ஒரு புகார் கூட கிடையாது” என அவர் தெரிவித்தார்.