வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:17 IST)

ரயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு சலுகை கிடையாது! – மத்திய அமைச்சர் பதில்

கொரோனா காரணமாக ரயில்களில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை தொடரும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு கட்டணத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 2020ம் ஆண்டில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் இந்த சலுகை கட்டண முறை அமல்படுத்தப்படவில்லை.

இதுகுறித்த கேள்விக்கு நாடாளுமன்ற கூட்டத்தில் பதில் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் “தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வந்தாலும், ரெயில்வே துறையில் கொரோனா தொற்றால், ஏற்பட்ட பெருமளவு வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் தொடரும் எண்ணம் தற்போது இல்லை” என்று கூறியுள்ளார்.

அதேசமயம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கபட்ட 15 விதமான சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.