ஐயப்பனை தோற்கடிக்க வந்தவரை நாம் வழிபடக் கூடாது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார் மீது வழக்கு..!
சபரிமலை ஐயப்பனின் இஸ்லாமிய நண்பரான வாவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கேரளாவில் உள்ள ஒரு இந்து சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பாதுகாப்பு மாநாடு, பந்தளத்தில் வலதுசாரி இந்து அமைப்புகளால் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில், செங்கொட்டுக்கோணத்தில் உள்ள ஸ்ரீ ராம தாச மிஷனை சேர்ந்த சாந்தானந்த மகரிஷி என்ற சாமியார் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "வாவருக்கும் ஐயப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஐயப்பனை தாக்க வந்த ஒரு பயங்கரவாதிதான் வாவர். ஒரு போரில் ஐயப்பனை தோற்கடிக்க வந்த அவரை, நாம் வழிபடக் கூடாது," என்று பேசியதாக கூறப்படுகிறது.
சாமியாரின் இந்த பேச்சு, ஐயப்ப பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகவும், இரு சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுவதாகவும், வன்முறையை தூண்டுவதாகவும் கூறி, வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான அனூப் வி.ஆர். உட்படப் பலரும் பந்தளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், மத நல்லிணக்கத்துக்கு எதிராக பேசுதல், இரு சமூகங்களுக்கு இடையே பகையை வளர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva