காவலர் தேர்வு வினாத்தாள் அவுட் – தேர்வு ரத்து; மூன்று பேர் கைது ?
குஜராத் மாநிலத்தில் காவலர் தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
குஜராத் மாநிலத்தில் காவலர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. டிசம்பர் 2 ஆம் தேதி (நேற்று) நடைபெறுவதாக இருந்த தேர்விற்காக மொத்தம் 2 ஆயிரத்து 440 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தத் தேர்வை எழுத 8.75 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதனை ஒட்டி நேற்று தேர்வு எழுதுவதற்காக இளைஞர்கள் தேர்வு மையங்களில் குவிந்தனர். பிற்பகலில் தேர்வு நடைபெற இருந்த சமயத்தில் தேர்விற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகின. இதனால் பரபரப்பான சூழல் உருவானது. இதனால் வேறு வழியின்றி தேர்வை ரத்து செய்வதாக அதிகாரிகள் அறிவித்தனர். தேர்வுக்காக காத்திருந்த லட்சக்கணகான இளைஞர்கள் அதிருப்தியில் திரும்பினர்.
தேர்வுத்தாள் வெளியீடு குறித்து விசாரனை மேற்கொண்ட அதிகாரிகள் கேள்வித்தாளை சமூக வலைதளங்களில் வெளியிட்டது தொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர். அவர்களில் இருவர் உள்ளூர் பாஜக நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.