1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (08:09 IST)

கோட்சேவை வைத்து விளம்பரம் தேடும் பட்டியலில் இணைந்த பாஜக பெண் எம்.எல்.ஏ

கடந்த சில நாட்களாகவே கோட்சே குறித்த கருத்துக்களை தெரிவித்து அரசியல் தலைவர்கள் தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் கூறி கமல்ஹாசன் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அதன்பின்னர் கமலுக்கு பதிலடியாக பிரக்யா தாக்கூர் உள்பட ஒருசிலர் கோட்சேவை தேசியவாதி என்றும், தேசபக்தர் என்றும் கூறி விளம்பரம் தேடி கொண்டனர்.
 
அந்த வகையில் தேர்தல் முடிந்தபின்னர் தற்போது பாஜக பெண் எம்.எல்.ஏ ஒருவர் மீண்டும் கோட்சே குறித்த சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள டாக்டர். அம்பேத்கர் நகர் பாஜக எம்.எல்.ஏவான உஷா தாகூர் என்பவர் கூட்டம் ஒன்றில் பேசிய போது, தனது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் தேசத்தை பற்றி அக்கறை கொண்ட நபராக கோட்சே திகழ்ந்ததாகவும், மகாத்மா காந்தியை கொலை செய்யும் அந்த முடிவை அவர் எந்த சூழ்நிலையில் எடுத்திருப்பார் என்பது கோட்சேவுக்கு மட்டுமே தெரியும் என்று கூறிய உஷா அதுகுறித்து நாம் யாரும் கருத்து சொல்ல முடியாது எனவும், அவர் ஒரு தேசியவாதி என்றும் தெரிவித்தார். 
 
வழக்கம்போல் கோட்சேவின் இந்த சர்ச்சைக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, உஷா தாக்கூரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற விஷம கருத்துக்களை கூறி வரும் பிரக்யா தாகூர், உஷா தாகூர் ஆகிய இருவரும் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா என்பவர் தெரிவித்துள்ளார்.