திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 11 நவம்பர் 2014 (17:58 IST)

பாஸ்போர்ட் வாங்க இனி ஆதார் அட்டை கட்டாயம்

பாஸ்போர்ட் வாங்க ஆதார் அட்டையை  முக்கிய ஆவணமாகக் கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், ஆதார் அட்டை பெறுவது கட்டாயம் ஆகியுள்ளது.
 
புதியதாக பாஸ்போர்ட் வழங்குவது, புதுப்பிப்பது உள்ளிட்ட பணியை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து வருகிறது. இதில், புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு குடும்ப அட்டை மற்றும் இருப்பிடச் சான்றிதழுடன் கூடிய 2 அடையாள அட்டைகள், வயது சான்றிதழ் ஆகியவை அவசியம். இதில் வயது சான்றிதழுக்காக பள்ளி கல்வித்துறை வழங்கும் இடமாற்றுச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
 
அடுத்ததாக குற்றப்பின்னணி ஏதாவது உள்ளதா என்பது பற்றிய  காவல்துறையின் அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்ததும் பாஸ்போர்ட் அலுவலகமே சம்மந்தப்பட்ட காவல்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கும்.
 
இதில் காலதாமதம் அதிக அளவில் ஏற்படுகிறது என்பதை அறிந்த  வெளியுறவுத்துறை அமைச்சகம், ஒரு புதிய முடிவை மேற்கொண்டுள்ளது.  அதன்படி, முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அட்டை திட்டத்தில் இவை மூன்றும் ஒரே சான்றிதழாக இடம் பெற்றுள்ளன. எனவே ஆதார் அட்டை அடிப்படையிலேயே இனி பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், ஆதார் அட்டையை அரசின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பாக டெல்லியில் நேற்று, வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில், ஆதார் அட்டை பாஸ்போர்ட் எடுக்க அவசியம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
தற்போது பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டையும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. விரைவில் ஆதார் அட்டை அவசியம் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் குற்றப்பின்னணி தகவல்களையும் எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய குற்ற ஆவண காப்பகம், நாடு முழுவதற்குமான குற்ற தகவல்களை கணினி மயமாக்கி வருகிறது. இன்னும் 2 மாதத்தில் இது முடிந்து விடும். அதில் குற்ற விவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு அனைத்து பாஸ்போர்ட் அலுவலகங்களில் இருந்தும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்படும்.
 
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவுடன், விண்ணப்பதாரரின் தகவல்களை ஏற்று காவல்துறை விசாரணை இல்லாமலேயே பாஸ்போர்ட் விரைவில் கிடைக்க வழிவகை ஏற்படும்.