தமிழகத்தில் அதிகம்; நாளொன்றுக்கு 43 பேர் மரணம் - நிதின் கட்காரி அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் சாலை விபத்தில் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர் எனவும், சாலை விபத்துக்களை குறைக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ”இந்தியாவில் கடந்த ஆண்டில் (2015), 5,01,423 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 1,374 விபத்துக்கள். இவ்விபத்தினால் நாள்தோறும் 400 பேர் பலியாகின்றனர். சராசரியாக ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. பலியானவர்களில் 54 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள்.
77 சதவீதம் விபத்துக்களுக்கு டிரைவர்களின் தவறுதலே காரணம். அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 69,059 விபத்துக்கள் நடந்துள்ளன. அடுத்த இரு இடங்களில் மகாராஷ்டிராவும் (63,805), மத்திய பிரதேசத்தில் 54,947 பேரும் வகிக்கின்றன.
விபத்தில் பலியானவர்களின் அடிப்படையில் உ.பி., (17,666) முதலிடமும், தமிழ்நாடு (15,642), மகாராஷ்டிரா (13,212) முறையே 2 மற்றும் 3வது இடங்களில் வகிக்கின்றன” என்று கூறியுள்ளார்.