1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. எம். முருகன்
Written By எம். முருகன்
Last Updated : புதன், 2 மார்ச் 2016 (15:04 IST)

முதல்வர் வேட்பாளருடன் 130 தொகுதிகள் : குழப்பத்தில் விஜயகாந்த்?

விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப் போகிறார்?

தேமுதிகவிற்கு 130 தொகுதிகள் மற்றும் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக ஒத்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
இப்போதுள்ள சூழ்நிலையில் விஜயகாந்த் எந்த பக்கம் செல்வார் என்பதுதான் தமிழக அரசியல் சூழ்நிலையில் எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
இப்போதைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி மட்டும்தான் உறுதியாகியிருக்கிறது. மற்ற கட்சிகள் கூட்டணி பேரத்தில் ஈடுபட்டுள்ளன. விஜயகாந்த் மற்றும் மற்ற கட்சிகள் எப்படி கூட்டணி வைக்கிறார்களோ, அதற்கேற்றார் போல் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வழக்கம்போல் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 
 
இந்நிலையில் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்னை சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து பேசினார். ஆனாலும் பாஜக-தேமுதிக இடையே உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 
 
விஜயகாந்த் வைத்த கோரிக்கைகளை மேலிடத்தில் பரிசீலித்து சொல்வதாக ஜவடேகர் கூறிசென்றதாக தெரிகிறது. எனினும், பாஜகவுடன்தான் கூட்டணி என்று விஜயகாந்த் அறிவிப்பார் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், ஜவடேகரை சந்தித்தது, ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. இதனால் பாஜகவினர் அதிருப்தியில் உள்ளனர். 
 
இருந்தாலும், விஜயகாந்தை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்று பாஜவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். ஒருபக்கம் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர், விஜயகாந்த் தங்கள் பக்கம் வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியினரும் விஜயாகாந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிரார்கள்.
 
சமீபத்தில் தேமுதிக சார்பில், அனைத்து மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசிய விஜயாகாந்த், திமுக 50 சீட் வரை தர இருப்பதாகவும், ஆனால் அமைச்சரவையில் பங்கு கேட்பதையும், வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்களை தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் திமுக ஏற்கவில்லை. எனவேதான் நான் யோசிக்கிறேன் என்று தொண்டர்களிடம் கூறுங்கள் என்று கூறியதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில், ஜவடேகர் விஜயகாந்தை சந்தித்து சென்ற அடுத்த நாளே “அடுத்த வாரம் ஜவடேகர் மீண்டும் தமிழகம் வருவதற்குள், விஜயாகாந்த் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பார்” என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு நம்பிக்கையோடு பேட்டியளித்தார். 
 
தேமுதிகவிற்கு 78 தொகுதிகள், துணை முதல்வர், அமைச்சரவையில் பங்கு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 50 சதவிகித இடம் என்ற கோரிக்கையை திமுக முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாக தெரிகிறது. அதிகபட்சம் தேமுதிகவிற்கு 54-60 சீட் வரை கொடுக்கலாம் என கருணாநிதி நினைக்கிறார்.
 
ஆனால் விஜகாந்த் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் திமுக-தேமுதிக கூட்டணி பேச்சு இன்னும் இழுபறியில் இருக்கிறது. இது தெரிந்து கொண்ட பாஜக, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர் என ஏற்றுக்கொள்வதுடன், 130 தொகுதிகள் வரை தருகிறோம் என்று கூறி பேரத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.
 
பாஜக பக்கம் போவதென்றால், விஜயகாந்துக்கு ஒரே நிபந்தனை, பாமக வை கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்பதுதான். அதனால்தான் சென்னை வந்த ஜவடேகர், பாமக தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை.
 
மக்கள் நலக்கூட்டணியினரும், விஜயகாந்தை முதல்வர் வேட்பாளரக ஏற்பதுடன் 100 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். 
 
திமுகவா?...பாஜகவா?... மக்கள் நலக் கூட்டணியினரா?.. 
 
என்ன முடிவெடுக்கப் போகிறார் கேப்டன்?