வியாழன், 14 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (17:42 IST)

வேலையில்லா பட்டதாரி 2 - திரைவிமர்சனம்!!

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், சமுத்திரகனி, விவேக், அமலாபால் ஆகியோர் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


 
 
விஐபி முதல் பாகத்தில் கடைசியாக கிடைத்த கட்டிட பணியை சரியாக செய்து கொடுத்ததால், அவர் பணிபுரியும் கம்பெனிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து ரகுவரின் (தனுஷ்) வாழ்க்கை இனிமையாக் இருக்கிறது.
 
முதல் பாகத்தில் காதலர்களாய் இருந்த தனுஷ் - அமலாபால் விஐபி 2-வில் நல்ல தம்பதியினராய் உள்ளனர். தனது குடும்பத்தில் உள்ள அனைவர் மீதும் அக்கறை காட்டும் குடும்பப் பெண்ணாக அமலாபால் நம்மை கவர்கிறார். 
 
இந்நிலையில், தென்னிந்தியாவில் கட்டிட தொழிலில் சாதனை படைப்போருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. இதில் அனைத்து விருதையும் தென்னிந்தியாவிலேயே பெரிய கட்டிட நிறுவனமான கஜோலின் வசுந்தரா கன்ஸ்ரக்சென்ஸ் கைப்பற்றுகிறது. 
 
ஆனால் சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷுக்கு கிடைக்கிறது. இதனால், ஆத்திரம் அடையும் கஜோல் தனுஷின் வாழ்க்கையில் புயலாய் உருவெடுக்கிறார். 
 
அனைத்திலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்பும் கஜோல், தனுஷை தன்னுடைய கம்பனெிக்கு இழுக்க முயற்சி செய்கிறார். தனுஷ், கஜோலின் திமிர் பேச்சால் அவருடன் பணிபுரிய மறுக்கிறார். 
 
இந்நிலையில், தனுஷை வேலையை விட்டு தூக்க பல இடைஞ்சல்களை கொடுக்கிறார் கஜோல். ஒரு கட்டத்தில் நிலைமையை உணரும் தனுஷ், தன்னால் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என வேலையை ராஜினாமா செய்கிறார்.
 
இதன் பின்னர் கஜோலை நேரில் சென்று பார்க்கிறார். அப்போது கஜோல் தனது கம்பெனியில் சேரச் சொல்லி தனுஷை கேட்கிறார். ஆனால், தனுஷ் தனக்கு வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளம் போதும் என கூறி வெளியேருகிறார். 


 

 
இதன் பின்னர்தான் ரியல் விஐபி துவங்குகிறது. வேலையில்லா பட்டதாரி என்ற அடையாளத்துடன் தனுஷ் என்ன செய்தார்? கஜோல் மீண்டும் தொல்லைகள் கொடுத்தாரா? கஜோலை அடக்க தனுஷ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
தனுஷ் தனக்கே உரிதான நடிப்பில் கவர்கிறார். முதல் பாகத்தை போலவே இந்த பாகத்திலும்  தனது நடிப்பில் ரசிக்க வைக்கிறார். அமலா பால் குடும்ப பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். தனுஷ் - அமலா பால் இடையேயான காதல் கடந்த பந்தம் படத்தில் சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. 
 
20 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கும் கஜோல், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை மனதில் நிறுத்துகிறார். வில்லத்தனம் கலந்த கர்வத்துடன் மிரள வைத்திருக்கிறார் கஜோல்.
 
விவேக் மற்றும் சமுத்திரக்கனி தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பாக இயக்கி இருக்கிறார். 
 
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அனிருத் இசையின் தாக்கம் படத்தில் இருந்துக்கொண்டே இருக்கிறது.