ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (13:15 IST)

வெள்ளைப்பூக்கள்: திரைவிமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் ரிலீசுக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படம் எப்படி உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்
 
காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட மகன் அஜய்யை பார்க்க அமெரிக்காவுக்கு செல்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி விவேக். அங்கு அஜய், அவருடைய மனைவி, பக்கத்து வீட்டில் உள்ள சார்லி, அவருடைய மகள் பூஜா தேவாரியா ஆகியோர்களுடன் பொழுதை போக்கி வரும் நிலையில் விவேக் வீடு உள்ள பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பேர் திடீரென கடத்தப்படுகின்றனர்
 
முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் சார்லியுடன் சேர்ந்து கடத்தல்காரன் யார் என்பதை விவேக் துப்பறிகிறார். இந்த நிலையில் தான் எதிர்பாராத வகையில் திடீரென விவேக் மகன் அஜய்யும் கடத்தப்படுகிறார். இதனையடுத்து இந்த வழக்கில் தீவிரமாக இறங்கும் விவேக், மகனை கண்டுபிடித்தாரா? கடத்தல்காரன் யார்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
 
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் விவேக். நிதானமான நடிப்பு, ஒரு விஷயத்தை ஆழமாக யோசிப்பது, மகனின் திருமணம் குறித்து வாக்குவாதம் செய்வது, மருமகளுடன் ஒட்டாமல் இருப்பது, கடைசியில் கொலைகாரன் யார்? என்பதை புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பது என விவேக் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
விவேக்குடன் கிட்டத்தட்ட முழு படத்திலும் டிராவல் செய்யும் கேரக்டர் சார்லிக்கு. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விவேக் போலவே இவரும் படம் முழுவதும் சீரியஸாக நடித்துள்ளார். பூஜா தேவாரியா கேரக்டருக்கு கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர் கொலையாளியா? என சந்தேகிக்க வைப்பதற்காக இந்த படத்தில் உள்ளார். அஜய் கேரக்டரில் நடித்துள்ள தேவ் அவருடைய வெள்ளைக்காரி மனைவியாக நடித்துள்ள ஹாண்டர்சன் ஆகியோர் தேவையான அளவுக்கு மிகையில்லாமல் நடித்துள்ளனர்.
 
ராம்கோபால் கிருஷ்ணராஜூவின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியில் பின்னணி இசைதான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. அமெரிக்காவில் படப்பிடிப்பு என்றாலே உயர்ந்த கட்டிடங்கள் தான் காட்சியாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் அமெரிக்காவின் இன்னொரு அழகான பகுதியையும் அதிர்ச்சியான பகுதியையும் ஒளிப்பதிவாளர் ஜெரால்ட் பீட்டர் காண்பித்துள்ளார். குறிப்பாக அந்த அணு உலைக்காட்சி பிரமாதம். அங்கு படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி வாங்கினார்கள் என்றே தெரியவில்லை. எடிட்டர் ரூபன் சரியாக இரண்டு மணி நேரத்திற்கு கச்சிதமாக படத்தை எடிட் செய்துள்ளார்.
 
நீண்ட வருடங்களாக படமெடுக்கும் இயக்குனர்களே த்ரில் கதையில் சறுக்கிவிடுவார்கள். ஆனால் அறிமுக இயக்குனர் விவேக் இளங்கோவனும், அவருடைய இளம் குழுவும் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸாக கொண்டு சென்றுள்ளனர். குறிப்பாக கொலையாளி யார் என்பதை யாராலும் ஊகிக்க முடியாதவாறு திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு தாயையும் பெண் குழந்தையையும் அடிக்கடி காட்டி, அந்த கதையை மெயின் கதையுடன் கச்சிதமாக இணைத்த இயக்குனரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதேபோல் 'வெள்ளைப்பூக்கள்' என்ற டைட்டிலுக்கும் பொருத்தமான கதையாகவும் உள்ளது
 
மொத்தத்தில் 'வெள்ளைப்பூக்கள்' ஒரு விறுவிறுப்பான த்ரில் பூக்கள். அனைவரும் பார்க்க வேண்டிய படம்
 
ரேட்டிங்: 4/5