விஷால், பிரசன்னா, வினய், ஆன்ட்ரியா, அனு இம்மானுவேல், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’.
தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் விஷால். அவருக்கு உதவியாக இருக்கிறார் பிரசன்னா. பான் கார்டு, சிம் கார்டு, ரேஷன் கார்டு என எல்லாவற்றையும் ஆதார் கார்டுடன் இணைத்து நம் விவரங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மோடி போல, தன்னைத் தேடி வருபவர்களைப் பார்த்தே அவர்களுடைய பிரச்னைகளைக் கண்டுபிடிக்கும் அசாத்திய திறமை படைத்தவர் விஷால்.
அப்படிப்பட்ட மேதையைத் தேடி, ஒரு பள்ளிச் சிறுவன் வருகிறான். தான் வளர்த்த நாய் இறந்துவிட்டதாகவும், அதைக் கொன்றவனை கண்டுபிடித்துத் தருமாறும் விஷாலிடம் கேட்க, அவரும் ஒப்புக் கொள்கிறார். நாய் இறந்ததை துப்புதுலக்கப் போகும் விஷாலுக்கு, நூதனமான முறையில் கொல்லப்பட்டவர்கள் பற்றித் தெரிய வருகிறது. அந்த கொலைகாரர்களை எப்படி விஷால் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
பரபரப்பான திரைக்கதையால் பார்ப்பவர்களைக் கட்டிப்போட்ட இயக்குநர் மிஷ்கினுக்குப் பாராட்டுகள். கிட்டத்தட்ட ‘அஞ்சாதே’ மாதிரியான பரபரப்பை, வேறு களத்தில் தந்திருக்கிறார். அவருடைய படங்களில் வழக்கமாக வரும் காட்சிகள் இதிலும் இருந்தாலும், அது பார்வையாளர்களை உறுத்தவில்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்.
விஷாலா இது..? கதையின் கேரக்டர் உணர்ந்து, உண்மையிலேயே கடினமாக உழைத்திருக்கிறார் விஷால். மிஷ்கின் ஹீரோக்களின் மேனரிசங்களை வெளிப்படுத்தும் இடத்திலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி… சபாஷ் சொல்லும் அளவுக்கு பேலன்ஸ் செய்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஹீரோவாக நடித்த வினய், இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பல்லை இளித்துக்கொண்டு நடித்த அமுல்பேபியா இது என்று கேட்கிற அளவுக்கு மெருகேறியிருக்கிறார். ஆன்ட்ரியா… சொல்லவே வேண்டாம். ‘தரமணி’யைப் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார். பிரசன்னா, அனு இம்மானுவேல், பாக்யராஜ் என எல்லா கேரக்டர்களுமே கச்சிதமான படைப்பு.
‘பிசாசு’ படத்தில் வயலின் மூலம் அழகான பாடலை இசைத்த அரோல் கரோலி, இந்தப் படம் முழுவதும் ஆங்காங்கே வயலின் இசையால் சிலிர்ப்பூட்டுகிறார். கார்த்திக்கின் கேமரா, பரபரப்புக்கு திகில் கூட்டுகிறது.
என்னதான் போலீஸுக்கு உதவி செய்திருந்தாலும், தனியார் துப்பறியும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு காவல்துறை இவ்வளவு உதவிகளைச் செய்வது எல்லாம் சினிமாத்தனமான விஷயம். அதுவும், விஷால் ஆர்டர் போடும் எல்லாவற்றையும் காவல்துறை செய்வது என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத விஷயம். சிசிடிவி இருக்கக் கூடிய பல இடங்களில் வில்லன் ஆட்கள் தைரியமாக சில விஷயங்களைச் செய்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே முடியும்.
சாகச ஹீரோக்களின் கதைகளில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பதால், இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடலாம்.