வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (13:27 IST)

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' திரைவிமர்சனம்

தமிழில் இதுவரை வெளிவந்த தரமான க்ரைம் சஸ்பென்ஸ் படங்களில் ஒன்று த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' இதே கான்செப்டில் வெளியாகியுள்ளது இன்று வெளியாகியுள்ள 'கொலைகாரன்'. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
 
விஜய் ஆண்டனியும் நாயகி ஆஷ்மாவும் எதிரெதிர் வீட்டில் குடியிருக்கின்றனர். இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு 'ஹாய்' சொல்வதோடு முடிந்துவிடுகிறது அவர்களது உறவு. இந்த நிலையில் ஒரு வழக்கின் விசாரணைக்காக ஆஷ்மா வீட்டிற்கு வருகிறார் போலீஸ் அதிகாரி அர்ஜூன். அந்த கொலையை ஆஷ்மாவும் அவரது தாயார் சீதாவும் செய்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சந்தேகப்படும் அர்ஜூன், அவர்களுக்கு விஜய் ஆண்டனியும் உதவியிருக்கலாம் என்று ஊகிக்கின்றார். அந்த கோணத்தில் அவர் விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசில திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த திருப்பங்கள் என்னென்ன? உண்மையான கொலைகாரன் யார்? கொலை செய்ய என்ன காரணம்? விஜய் ஆண்டனிக்கும் ஆஷ்மாவுக்கும் இடையே என்ன உறவு? போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது பத்து நிமிட கிளைமாக்ஸ்
 
விஜய் ஆண்டனிக்கு வழக்கம்போல் நடிப்பு சுத்தமாக வரவில்லை. காதல், சோகம், ஆக்சன், கோபம் என எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்துள்ளார். இருப்பினும் இவர் தேர்வு செய்யும் கதைகள் நன்றாக இருப்பதால் இவரது படங்கள் தப்பித்துவிடுகின்றன. அந்த வகையில் இந்த படமும் அவருக்கு கைகொடுக்கும்,
 
இந்த படத்தின் நிஜ நாயகன் அர்ஜூன் தான். போலீஸ் அதிகாரி வேடத்திற்கு இன்னும் கச்சிதமாக பொருந்தும் அர்ஜூன், விஜய் ஆண்டனி மீது சந்தேகப்பட அவர் வைக்கும் காரணங்கள் ஏற்று கொள்ளும் வகையில் உள்ளது. கொலை நடந்த விதத்தை நாசரிடம் ஆலோசனை செய்யும் காட்சிகளில் அவரது தனித்துவமான நடிப்பு தெரிகிறது. அதேபோல் விஜய் ஆண்டனியிடம், 'ஒரு கொலை நியாயமான காரணத்திற்காக நடந்திருந்தாலும், கொலைகாரனை சட்டத்தின் முன் நிறுத்தாமல் விடமாட்டே' என அவர் சவால் விடுவது அவருக்கே உரிய கெத்து
 
நாயகி ஆஷ்மாவுக்கு கொஞ்சம் அழுத்தமான கேரக்டர். குருவி தலையில் பனங்காய் போல் உள்ளது அவரது நடிப்பு. இந்த கேரக்டருக்கு புதுமுகத்திற்கு பதிலாக ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகையை தேர்வு செய்திருந்தால் படத்தின் லெவலே வேறு
 

நாசர், பகவதி பெருமாள் இருவருக்கும் இந்த படத்தில் பெரிய வேலை இல்லை. சீதாவுக்கு சின்ன கேரக்டர் என்றாலும் அவரது நடிப்பு மனதில் நிற்கின்றது.
 
படத்தின் மிகப்பெரிய பிளஸ் சைமன் கிங் பின்னணி இசைதான். குறிப்பாக படம் முழுவதும் வரும் தீம் மியூசிக் அபாரம். ஆனால் படத்தின் முதல் பாதியில் உள்ள இரண்டு பாடல்கள் படத்திற்கு பலவீனம். இரண்டு பாடல்களையும் கட் செய்துவிட்டால் நல்லது
 
சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னை தற்காத்து கொள்ள செய்த கொலைக்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டுமா? என்ற த்ரிஷ்யம் படத்தின் கான்செப்ட் தான் இந்த படத்திலும் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் பயன்படுத்தியுள்ளார். ஆனால் திரைக்கதை மூலம் முற்றிலும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தியுள்ளார். மேலும் இந்த படம் ஒரு ஜப்பான் படத்தின் தழுவல் என்று அவர் டைட்டில் போட்டு தன்னுடைய நேர்மையையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை அடுக்கடுக்காக முடிச்சுக்களை போட்டு இடைவேளையின்போது பாதி முடிச்சையும் கிளைமாக்ஸில் மீதி முடிச்சையும் அவிழ்க்கும்போது பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. மொத்தத்தில் த்ரில் ரசிகர்களுக்கு ஒரு சரியான விருந்துதான் இந்த கொலைகாரன்