1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 28 செப்டம்பர் 2015 (19:16 IST)

போலீஸின் கிருமினல் தனத்தை காட்டும் ‘கிருமி’ - திரை விமர்சனம்

காக்கா முட்டை படத்திற்காக தேசிய விருதுபெற்ற மணிகண்டனின் வசனத்தில் வெளியாவதால் பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியப் படம் ‘கிருமி’.
 
வேலையில்லாமல் திருமணமாகியும் இரவில் வீட்டிற்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரிவது, குடிப்பது, சீட்டாடுவது, இளம்பெண் ஒருவருக்கு ரூட் விடுவது என சாதாரண இளைஞனாக வருகிறார் கதிர்.
 

 
இவர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சார்லியும், அவரது மனைவி தமிழ்செல்வியும் நெருக்கமாகவும், ஆதரவும் அளித்து வருகின்றனர். தனக்கு ஏதாவது வேலையில் சேர்த்துவிடும்படி சார்லியிடம், கதிர் அடிக்கடி முறையிட்டு வருகிறார்.
 
இந்நிலையில், எதேச்சையாக குடித்துவிட்டு பாரில் சீட் விளையாடுகையில், கதிருக்கும், பார் நடத்தும் தீனாவிற்கும் மோதல் வர, தீனா கதிரை அடித்து வடுகிறார். அதனால், போதையுடன் நடந்துவர அவரை போலிஸார் கூப்பிட்டு விசாரிக்கின்றனர்.
 
அப்போது கதிர், ‘என்ன சார், குடிச்சுட்டு வண்டிதான் ஓட்டக்கூடாது. நடந்துகூடவா வரக்கூடாது’ என வாயைவிட, போலீஸ்காரனிடமே திமிராக பேசுகிறாயா? என்று அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
 
மறுநாள் காவல் துறையில் ’இன்ஃபார்மராக’ பணிபுரியும் சார்லி எதேச்சையாக பார்க்க பின்னர் அங்கிருந்து அவரை மீட்டுச் செல்கிறார்.
 

 
சில நாட்களுக்கு பிறகு கதிரையும் காவல்துறை ‘இன்ஃபார்மராக’ சேர்த்து விடுகிறார். இதற்கு பிறகு காவல்துறையில் கதிரின் செல்வாக்கு உயருகிறது. காவல்துறை இன்ஸ்பெக்டர் டேவிட் சாலமோன் ராஜாவிடமும் நல்லபெயர் கிடைத்து விடுகிறது.
 
இதனால், கதிர் ஒரு போலீஸ் போலவே தன்னை பாவித்துக்கொண்டு ஒருவித திமிர்தனத்தோடும், துடுக்குத்தனத்தோடும் திரிகிறார். காவல்துறைக்கு அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனால், மற்ற இன்ஃபார்மர்களுக்கு பொறாமை ஏற்படுகிறது.
 
அதோடு சீக்கிரம் தான் பெரிய ஆளாகி செட்டில் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார். இதனை சார்லி பலமுறை கண்டிக்கிறார். ’போலிஸும், பிஸ்னஸும் வேறு ஒரு சிஸ்டம்’ என்று விளக்குகிறார். ஆனால், அதனை கதிர் கண்டுக்கொள்ளாததோடு, சார்லியையும் கடிந்து கொள்கிறார்.
 
ஒருகட்டத்தில் சீட்டு விளையாடுகையில் தன்னை அடித்த தீனாவை பழிவாங்க துடிக்கிறார். இதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருக்க, கதிர் பணிபுரியும் ஸ்டெஷன் இன்ஸ்பெக்டர் டேவிட் சாலமோன் ராஜாவுக்கும், தீனா பார் நடத்தும் ஏரியா இன்ஸ்பெக்டருக்கும் மோதல் ஏற்படுகிறது.
 
இதனை சாக்காக பயண்படுத்தி தீனாவின் பாரில் சீட்டாட்டம் நடக்கும் நேரம் பார்த்து காவல்துறைக்கு ‘இன்ஃபார்ம்’ செய்து விடுகிறார். இதனால் பாரில் ‘ரைடு’ நடக்க தீனா மாட்டி விடுகிறார். தீனாவை போலீஸ் கைது செய்துவிடுவதோடு பாரில் இருந்த 25 லட்சத்தையும் கைப்பற்றி விடுகின்றனர்.

இந்நிலையில், ஒருநாள் சார்லியும், கதிரும் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் கதிரை கொலை செய்ய வருகிறது. அங்கிருந்து, கதிர் தப்பிவிட, கையில் சிக்கிய சார்லியை கொலை செய்து விடுகிறது.
 
அதன் பிறகு கதிருக்கு தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்கின்ற பயம் வந்துவிடுகிறது. இதனால், எப்போதுமே ஒருவித பய உணர்ச்சியோடுவே கதிர் நடுமாடும் நிலைமை வருகிறது.
 

 
அதுவரை வீட்டிலேயே ஒழுங்காக தங்காத கதிர், அதற்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியே செல்லாமல் இருக்கிறார்.
 
அதற்குப் பிறகு யார் சார்லியை கொலை செய்தது; ஏன் கொலை செய்தார்கள்; தீனாவின் கும்பல் கதிரை கொலை செய்ததா? கதிர் என்ன ஆனார் என்பது மீதிக்கதை.
 
துடிப்புமிக்க இளைஞராக கதிர் கணகச்சிதமாக தனது பணியை செய்து விடுகிறார். அவர்க்கு மனைவியாக வரும் ரேஷ்மி மேனன் அழகான, பொறுப்புமிக்க குடும்ப பெண்ணாக அற்புதமாக நடித்திருக்கிறார்.
 
இன்ஸ்பெக்டர் டேவிட் சாலமோன் ராஜாவின் நடிப்பு எதார்த்தம். பார் நடத்துபவராக வரும் தீனா சில காட்சிகளே வந்தாலும் மிரட்டுகிறார். கதிரின் நண்பராக வரும் யோகி பாபு காமெடியில் கலக்கி இருக்கிறார்.
 

 
முக்கியமாக சார்லியின் இயல்பான நடிப்பு அபாரம். அவர் தனது ஊனமுற்ற மனைவியிடம் அன்பு செலுத்துவதும், கதிரிடம் அக்கறையாகவும், கரிசனையாகவும் பேசும் சார்லி மனதில் நிற்கிறார்.
 
காவல் துறையினர் எப்போதும் தான் நினைத்ததை சாதிப்பதற்காகவும், தனது லாபத்திற்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதை அழகாக காட்டி இருக்கிறார்கள்.
 
தனக்கு அதுவரை உதவி செய்த கதிரை ஒரு கட்டத்தில் அவனுக்கு மட்டும் அனைத்து உண்மையும் தெரியும் என்பதற்காக, இறுதியில் அவனையே கொல்ல நினைப்பதுவரை அப்படியே காவல் துறையினரின் உண்மை முகத்தை புட்டு வைத்திருக்கிறார் இயக்குநர் அனுசரன். வசனங்களும் பளிச்..

எந்த குற்றவாளியை பிடிப்பதற்காக கதிர், சார்லியை இழக்க வேண்டியதாயிற்றோ, கடைசியில் அவர்களிடமே சமாதானமாக பேரம் பேசும் காட்சி அருமை. காவல் துறைக்கு உள்ளேயே மோதிக்கொள்வதும், பின் சமரசமடைவதும் என எதார்த்தமாக காட்டியிருக்கிறார் அனுசரன்.
 
இசையில் ’கே’ அசத்தல். பின்னணி இசையில் ஜிகிர்தண்டா ‘சந்தோஷ் நாராயணனை நினைவுப் படுத்துகிறார். கான பாலா குரலில் இரண்டு பாடல்களும் அருமை. அதேபோல் ’கே’வின் குரலில் ஓராயிரம் ஓட்டைகள் பாடலும் சூப்பர்.
 
ஆனாலும், படம் முடியும்போது ஏதோ ஒன்று மிஸ் ஆகிவிடுகிறது. அந்த குறையை மட்டும் போக்கியிருந்தால் ‘கிருமி’ அற்புதமான படமாக இருந்திருக்கும். ஆனாலும் நிச்சயமாக பார்க்கலாம்.