1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By ஜே.பி.ஆர்
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2015 (10:47 IST)

கங்காரு விமர்சனம்

முறைதவறிய பாலியல் உறவுகளை பின்னணியாக வைத்து படம் செய்த சாமி, தன்னைத்தானே சுத்திகரித்து எடுத்த படம், கங்காரு. இந்தப் படத்தின் கதை அவருடையதல்ல, உதவி இயக்குனர் ஒருவருடையது.
 
ஒரு வயது தங்கையுடன் மலையூருக்கு வரும் பத்து வயது சிறுவன் முருகேசனுக்கு அடைக்கலம் தருகிறார், மலையூரின் சிறுவியாபாரியான தம்பி ராமையா. தங்கையை எப்போதும் தன்னுடன் வைத்துக் கொண்டிருப்பதால் கங்காரு என்ற செல்லப் பெயர் அண்ணன் முருகேசனுக்கு கிடைக்கிறது. இந்த முற்றிப்போன பாசம் எப்படியெல்லாம் ஒருவனை ஆட்டிப் படைக்கும் என்பதை கூறுகிறது கங்காரு.
தங்கையே உலகமாக வாழும் அண்ணன் முருகேசனாக நடித்துள்ளார் அர்ஜுன். அவரது முறுக்கிய உடல்மொழியும், தாடி மீசையுமான தோற்றமும் அந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தினாலும், அந்த ஓவர் முரட்டுத்தனம் போகப் போக ஓவர்டோசாக தெரிகிறது. தங்கையாக ஸ்ரீ பிரியங்கா. அதிக வேலையில்லை. பியங்கா காதலிக்கும் இளைஞன் மட்டுமின்றி, அவருக்கு திருமணத்துக்கு நிச்சயிக்கும் இளைஞனும் மர்மமாக இறந்து போகிறார்கள். அவர்களை கொன்றது யார்? 
 
காவல்துறை இந்த கொலைகளை விசாரணை செய்ய ஆரம்பிக்கையில் படம் விறுவிறுப்பை எட்டுகிறது. அர்ஜுனின் அதீத் தங்கைப் பாசம் விபரீத எல்லைக்கு திரும்புவதை இயக்குனர் சாமி சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக அவரது நடிப்பும் ஓகேதான். அண்ணன், தங்கை உறவில் அவர் வைத்திருக்கும் ட்விஸ்ட் ஆச்சரியமான திருப்பம்.
 
படத்துக்கு பாடகர் ஸ்ரீநிவாஸ் இசையமைத்துள்ளார். கங்காருவின் சிறப்புகளில் இசைக்கு முக்கிய இடமுண்டு. ராஜரத்தினத்தின் கேமரா மலையழகை அள்ளித் தருகிறது. ஆர்.சுந்தர்ராஜன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வர்ஷா என பலர் நடித்திருக்கிறார்கள். கலாபவன் மணியின் வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது. சாமி படத்துக்கு வந்திட்டு சும்மா திரும்புவதா என்று முணுமுணுப்பவர்களுக்கென்றே ஒரு பாடல் காட்சியில் வர்ஷா தாரளமாக ஆட்டம் போடுகிறார். வர்ஷாவின் நாயகி கதாபாத்திரம் செயற்கையான திணிப்பு. 
 
சுவாரஸியமில்லாத முன்பகுதியை விறுவிறுப்பான இரண்டாவது பகுதி ஈடுசெய்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கி சீர்ப்படுத்தியிருந்தால் கங்காரு அதிகம் பேரை கவர்ந்திருக்கும்.