“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” - 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

Webdunia|
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.

‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.


இதில் மேலும் படிக்கவும் :