இயற்கை மற்றும் சத்தியத்தை பற்றி கூறும் குர்ஆன்
இயற்கையை தன் சுயநலத்துக்காக மாசுபடுத்தும் மனிதன் பற்றியும் சத்தியம் செய்து விட்டு எளிதாக அதை மீறுவோர் பற்றியும் குர்ஆன் கூறுவதாவது.
உங்களுடைய சத்தியங்களை உறுதிப்படுத்திய பின்னர் முறிக்காதீர்கள். ஏனெனில், நீங்கள் இறைவனை உங்களுக்கு சாட்சியாக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் திண்ணமாக, இறைவன் நன்கு அறிகின்றான். சத்தியத்தை முறிப்பதன் மூலம் உங்கள் நிலை, "தானே சிரமப்பட்டு நூலை நூற்று பிறகு அதனைத் துண்டாக்கி விட்டாளே' அத்தகைய பெண்ணின் நிலை போன்று ஆகிவிடக்கூடாது.
உங்களில் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை விட அதிக ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக, உங்கள் விவகாரங்களில் உங்கள் சத்தியங்களை ஏமாற்றும் ஆயுதமாக ஆக்கிக் கொள்கின்றீர்கள்.
இந்த வசனத்தை மனதில் கொண்டு, சத்தியம் செய்யும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள். இயற்கையை மாசுபடுத்தாதீர். இறைவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் வானத்திலிருந்து மழை பொழியச் செய்தான். பிறகு அதன் மூலம் உங்களுக்கு விதவிதமான விளைபொருட்களை உற்பத்தி செய்தான்.
கப்பலை அவனே உங்களுக்கு வசப்படுத்தி தந்தான். அது அவனது கட்டளைக்கேற்ப கடலில் செல்கிறது. மேலும் உங்களுக்கு ஆறுகளையும் வசப்படுத்தித் தந்தான். மேலும் சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும் இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான். நீங்கள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அவனே உங்களுக்கு வழங்கினான். இறைவனின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றால் உங்களை வரையறுக்கவே முடியாது. ஆனால், மனிதன் பெரும் அநீதியாளனாகவும் நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்'' என்கிறது குர்ஆன். காரணம் இறைவன் தந்த இயற்கையை மனிதன் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறான்.
அவன் தந்த வானக்கூரைக்கு கீழே "பங்களா" என்ற பெயரில் அவனது உலகை விட பெரிய மாளிகை கட்டியிருப்பதாக நினைத்துக்கொண்டு, இறைவனின் பரந்த உலகை ஏளனம் செய்கிறான். இதற்கெல்லாம் தண்டனை உண்டு என்பதை மறந்து விடுகிறான். துன்பத்தை தானாகவே வரவழைத்துக் கொண்டு இறைவனின் மீது பழிபோடுகிறான்.