1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By sivalingam
Last Modified: சனி, 4 மார்ச் 2017 (07:04 IST)

கால் பாத ஆணி தவிர்ப்பது எப்படி?

ஒரு மனிதனின் ஒட்டுமொத்த எடையையும் தாங்க கூடிய கால் பாதங்களை கவனத்துடன் வைத்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். நம்முடைய உடம்பை தாங்குவது மட்டுமின்றி உடல் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் பாதங்கள் உள்ளன. இவ்வாறு உடலின் முக்கிய பாகமான காலில் ஒன்று பாத ஆணி என்ற பாதிப்பு பலருக்கு ஏற்படும். பாதங்களின் அடிப்பாகமான்  சதைப்பகுதியில் ஏற்படுவதால், இதை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாது.





கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போல ஒரு தோற்றம் உருவாகும். பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினல் சீழ் கோத்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற்படும். இந்த பிரச்சனையால் நடக்கும்போதும் நிற்கும்போதும் தாங்க முடியாத வலி ஏற்படும். உள்ளங்கால்களில் மட்டும்தான் ஆணி ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். சில நேரங்களில் தேய்ந்த காலணிகளைப் பயன்படுத்துவது, கால்களைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவற்றின் காரணமாகக் கால் விரல்களின் பக்கவாட்டிலும் ஆணிகள் ஏற்படலாம்.

பாத ஆணியை தவிர்க்க மென்மையான சோப்பைப் பயன்படுத்திப் பாதத்தைக் கழுவலாம். பின்னர் கால்களைச் சுத்தம் செய்த பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை போடலாம். மேலும் டிகெராட்டினிசேஷன் க்ரீம் (Dekeratinization creams) போன்ற மாய்ஸ்சரைசர் க்ரீம்களைக் கால்களில் தடவலாம். இந்த க்ரீம்களில் உள்ள கெராட்டின், இறந்த செல்களை அகற்ற உதவும். இந்த பிரச்சனைக்கு சுய சிகிச்சை செய்துகொள்வது தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளியாக இருந்தால், கால்களை அகற்றவேண்டிய அளவுக்குப் பிரச்னை பெரிதாகலாம். எனவே, மருத்துவரை ஆலோசிப்பதுதான் சரியான வழி.

பாத ஆணி வராமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

கால்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். பாதங்களைச் சோப்புப் போட்டுக் கழுவி, சுத்தமான துணியால் நன்கு துடைக்க வேண்டும்.

பாதத்துக்குப் பொருத்தமான சரியான அளவிலான காலணிகளை அணிய வேண்டும்.

அழுத்தமான ஷூக்களையோ, பெரிய அளவிலான (லூசான) ஷூக்களையோ அணியக் கூடாது.

கால் ஆணி பாதிப்புக்கு உள்ளானவர்கள், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர்களுடைய கால்களுக்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் ஆண்டுதோறும் கால்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.