1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. தலங்கள்
  4. The reason for the Pancha Linga in Kedarnath is the reason...

கேதார்நாத்தில் உள்ள பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்பட காரணம்...!

கேதார்நாத்
கைலாய மலையில் பரமசிவன் தனது மனைவியான பார்வதியுடன் அமர்ந்து கொண்டு அனைவருக்கும் காட்சி தந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களிலும் இருந்து வந்திருந்த பல ரிஷிகள் அங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டுச் சென்றார்கள். அந்த நேரத்தில் பிருங்கி எனும் மாபெரும் முனி சிவபெருமானை மட்டுமே வணங்கி விட்டு பார்வதியை வணங்காமல் சென்றார்.

 
முனிவரிடம் காரணத்தை கேட்டபோது, சிவன் வேறு, பார்வதி வேறு என்று தான் கருதுவதால் சிவபெருமானைத் தவிர வேறு  யாரையும் தாம் வணங்குவதில்லை என்றும் கூற அதனால் கோபமுற்ற பார்வதியும் அவருக்கு சாபம் தந்தார். அது மட்டும்  அல்ல அங்கிருந்து கோபமாக எழுந்து சென்று விட்டார். அவர் மனதில் ஒரு ஏக்கம் ஏற்பட்டது.
 
சிவன்  வேறு, சக்தி வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள்,  இனி இரண்டும் ஒன்றே என்பதை பரிபூரணமாக உணர வேண்டும். சக்தி இல்லையெனில் சிவனும் இல்லை என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.  
 
பார்வதி நேராக கேதார்னாத்துக்கு வந்து அங்கிருந்த கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தில் சென்று அமர்ந்து கொண்டு கேதார கௌரி விரதத்தினை மேற்கொண்டு தவம் இருந்தாள். கேதாரம் என்பது இமயமலையின் ஒரு பகுதி ஆகும். இங்குதான் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் எனும் பெயரில் தோன்றினார். பார்வதி  சிவனை  வழிபட்டு அவர் கொடுத்த  வரத்தின்படி அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தை பார்வதி பெற்றாள். 
 
இனி உலகம் சிவசக்தி என்றே அவர்கள்  இருவரையும் போற்றி வணங்க வேண்டும் என்று வரம் கேட்க சிவபெருமானும்  தன்னுடன் அவளை பாதியாக இணைத்துக் கொண்டப் பின் சில காலம் பொறுத்து தக்க நேரத்தில் அந்த அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் கூறினார். பார்வதியை தன்னுடன் பாதியாக இணைத்துக் கொள்வேன் என வாக்குறுதி  கொடுத்தப் பின் பார்வதியும் சிவபெருமானும் அதே வனப்பகுதியில் சில நாட்கள் தங்கி பொழுதைப் போக்க அவர்கள்  கண்ணாமூச்சி ஆட்டம் ஆடினார்கள்.
 
சிவபெருமானும் பல இடங்களில் சென்று தனது உருவான லிங்க கற்களை வைத்து விட்டு அவற்றில் ஐந்தில் தான் ஒளிந்து கொண்டார். பல லிங்கங்கள் இருந்ததைக் உணர்ந்த பார்வதி, அவற்றைத் தொட்டு பார்த்து ஏமாந்தாள். ஒரு இடத்தில் இருந்த  லிங்கத்தைக் கட்டிப் பிடிக்க அதில் அவர் உடலைத் தழுவியதைக் போன்ற உணர்வைப் பெற்றாள். அவள் கட்டிப் பிடித்தப் பகுதி  அவருடைய உடல் பகுதியாக இருந்தது. இப்படியாக அவள் ஐந்து இடங்களில் அவளது கைகளில் அவருடைய உடல், காது,  கால், கைகள் மற்றும் வயிறு என அவருடைய உடல் அமைப்புக்கள் அகப்பட்டன. இப்படியாக அவற்றைக் கொண்டு அந்த ஐந்து  இடங்களில் ஒளிந்து இருந்த சிவபெருமானை பார்வதி கண்டு பிடித்து ஆட்டத்தில் வெற்றி பெற்றாள் .
 
அந்த விளையாட்டு முடிந்தவுடன் பார்வதி சிவபெருமானிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள். பஞ்ச பூதங்களைப் போன்ற அவை ஐந்தும் சிவபெருமானின் புனித ஆலயங்களாக மாறி பக்தர்கள் பூஜிக்கும் இடங்களாக அமைய வேண்டும். அவள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தான் தக்க நேரத்தில் அந்த ஐந்து இடங்களிலும் எழுந்தருளுவேன் என்று அவளுக்கு வாக்குறுதி தந்தார். அதுவே கேதார்நாத்தில் பஞ்ச லிங்க ஆலயங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தன.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
கங்கா தேவியை சிவபெருமான் தலையில் வைத்திருக்க காரணம் என்ன...?