ஆத்தூர் கோட்டை சுவடு தெரியாமல் போய்விடுமோ?.....

ஆத்தூர் கோட்டை சுவடு தெரியாமல் போய்விடுமோ?.....


Sasikala|
சமுக விரோதிகளின் கூடாரமாகவும், அழிந்து வரும் வரலாற்றுச் சின்னமாக உள்ளது ஆத்தூர் கெட்டி முதலி கோட்டை.

 


அழிவு நிலையில் உள்ள இந்த கோட்டையை கூடுதல் நிதி ஒதுக்குவதுடன் இதை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆத்தூர் கோட்டையை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள். கி.பி. 1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு இராணுவத் தொகுப்பை, இங்கு 1799 ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது. அதன் பின்னர் அந்த மதிப்பையும் இது இழந்தது.
 
இக்கோட்டை 62 ஏக்கர்கள் அளவுடையது. (250,000 சதுரமீட்டர்கள்/m2) கோட்டையின் சுவர்கள் ஏறத்தாழ 30அடி (9.1 மீ) உயரமும், 15 (4.6 மீ) அடி அகலமும் உடையதாக உள்ளது.
 
இன்றைய நிலை
 
இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக் கட்டுபாட்டில் இருக்கிறது. இருப்பினும், கோட்டையின் உள்ளே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் ஆலயமும், திருமால் ஆலயமும் உள்ளன. மேலும், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஐயனார் ஆலயமும் உள்ளது. கோட்டையின் பெரும்பகுதி குடியிருப்புகளாக மாறியுள்ளன. குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே, அரசின் கட்டுபாட்டு எல்லைக்குள் இருப்பினும், சிதிலமடைந்து வருகிறது.
 
இந்த கோட்டையை பற்றிய சுவாரசியமான தவல்களை சொல்கின்றனர். கெட்டி முதலி வேட்டையாட சென்றபோது, ஒரு முயல் அவரைக் கண்டு அஞ்சி ஒரு புதரின் பக்கம் ஓடியுள்ளது. அந்த முயலை இவர் ஆவலோடு பார்க்க, இந்த வெண்ணிற முயல் பொன்னிறமாக தோன்றியதாம். அவ்விடத்திலிருந்து, 7 இரும்புக் கொப்பரையில் பொனும், மணியும் கிட்டைத்தனவாம். அதனைக் கொண்டே கெட்டி முதலி இக்கோட்டையை கட்டினார் என்றும், மதிலை அமைக்கத் தேவையான கற்களை இந்த ஊருக்குத் தெற்கேயுள்ள குன்றிலிருந்து கொண்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.
 
கல்வெட்டு குறிப்புகளும், தானியக் களஞ்சியங்களும், அரசவைகளும், காவலர் கண்ணுறங்கும் இடங்களும், பாவலர் பண்ணிசைக்கும் இடங்களும், ஆடல் அரங்கமும், பாடலரங்கமும், மடப்பள்ளிகளும், சிப்பாய் மண்டபமும் அகழிகள் போன்றவைகளும் தமிழ், கிரந்தம், தெலுங்கு, சமஸ்கிருதம் கலந்த கல்வெட்டுகள் நலிந்தும் சிதைந்தும் காணப்படுகின்றன.
 
வரலாற்றுச் சிறப்புமிக்க முதலி கோட்டையைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக ஒப்படைக்க இதை சுற்றுலாத்தலமாக அரசு அறிவிக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஆத்தூர் மக்களின் விருப்பமாக இருக்கிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :