தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள்

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள்


Sasikala|
1. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் (மலைக்கோட்டை)
 
திருச்சி என்றாலே மலைக்கோட்டை. அதன் அருகில் அகண்டகாவிரி. அடுத்து திருவரங்கம். இப்புனித தலத்தை  உலகம் முழுவதும் இருந்து வரும் மக்கள் அனைவரும் தினமும் கண்டு களித்து வருகின்றனர். இக்கோயிலின் கட்டுமானப்பணி மிகவும் இன்றும் வியப்பூட்டுகிறது.

 
 
இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன. மேல் குகையில் கிரந்தத்திலும், தமிழிலும்  கல்வெட்டு செய்திகள் உள்ளன. கீழ் குகையில் 104 செய்யுள்கள் அந்தாதியாக உள்ளன.
 
மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும்.  மலைக்கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண  வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.
 
திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில்  கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது.
 
2. தஞ்சை பெரிய கோவில்
 
கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன்  ராஜராஜ சோழன். ஆயிரம் வயது ஆகியும் இன்றும் வாலிப முறுக்கோடு காட்சியளிக்கிறது அந்தக்கோவில்.   அதுதான் தஞ்சை பெரிய கோவில். கல்வெட்டுச் செய்திகள் மூலம் தஞ்சை பெரிய கோயிலுக்கு மாமன்னன்  இராஜராஜனால் முதல் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.


 
 
இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.  கட்டுமான கற்கோயில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில்.
 
மண்டபங்களும், விமானமும், அர்த்த மண்டபமும், மகாமண்டபமும், பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற  பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு  கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில்  இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன.
 
தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர். நீளம் 7 மீ,  அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
 
3. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
 
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான்  மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்.


 

 
மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை  வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் மீனாட்சி, சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய  மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து  மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது. 
 
மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும்  மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால்  கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது  என்று ஒரு வரலாறு கூறுகிறது.
 
மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு  கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம்  என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
 
மீனாட்சி அம்மன் திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக  847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது  நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது.
 
ஆலய உட்பகுதியில் ஒரு ஏக்கர் விஸ்தீரனத்தில் அமைந்துள்ள பொற்தாமரை குளமும், தலவிருட்ஷமான கடம்ப  மரமும் ஆலயத்தின் வரலாற்றில் மேலும் சிறப்பு சேர்க்கின்றன.
 
பலநூற்றாண்டு பழமையான கட்டிடவேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த ஆலயம் நவீன பல் வர்ண  பூர்ச்சுக்களால் தற்காலத்தில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. வரலாற்று தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை  நுணுக்கமும் ஒன்றுசேர்ந்தது இந்த ஆலயம்.
 
மதுரை மீனாட்சியில் அமைந்துள்ள முதன்மை விக்கிரகம் முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால்  உருவாக்கப்பட்டதாகும். மரகத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் மூல விக்கிரகத்தினை  "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


இதில் மேலும் படிக்கவும் :