வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

சிவன் வழிபாட்டின் மகிமைகள்

சிவன் வழிபாட்டின் மகிமைகள்

சிவம் என்றும் சிவபெருமான் என்றும் பரவலாக அழைக்கப்பெறும் இவருக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன.


 


இவர் பிறப்பும் இறப்பும் இல்லாதவர் என்றும், இவரே மும்மூர்த்திகளையும், தேவர்களையும், அசுரர்களையும் உலகினையும், உலக உயிர்களையும் தோற்றுவிப்பதாகவும்,  பிரளயக் காலத்தில் அனைவற்றையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கிச் சிவன் மட்டும் நிலையாக இருப்பதாகச் சைவ சமய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. இந்து சமய புராணங்களிலும், இந்து தொன்மவியல் கதைகளிலும் மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் இவரின் அம்சமாக கருதப்படுகிறார்.

சிவம் என்றால் அன்பு, இன்பம், மங்களம் என்று பொருள், அன்பாக அருட் பெருஞ் சோதியாக, இன்பமாக மங்களமாக மறைபொருளாக எங்கும் நீக்க மறநிறைந்திருக்கும் அந்த பரமனைக் கடல் கொஞ்சும் குமரி முதல் கைலைப்பனிமலை வரை ஆலயங்கள் பலவற்றில் அமர்த்தி வழிபட்ட பெருமை மிக்கது நமது புண்ணிய பூமி.
 
சிவவழிபாட்டின் சிறப்புகளை வேதங்கள் விளக்குகின்றன. இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன.  உபநிஷதங்கள் உணர்த்துகின்றன. புராணங்கள் பகருகின்றன.
 
வேதங்களிலும், உபநிஷத்துகளிலும் சிவபெருமான், ருத்திரன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார். ருத்திரன் என்றால் துன்பங்களைத் துடைப்பவன் என்று பொருள்.
 
பசுபதி, பூதபதி பூதநாதர் என்பன வேதங்கள் ருத்திரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரனுக்குச் சூட்டும் சிறப்புப் பெயர்கள், சிவன் உக்கிரவடிவினன், ஜடாமுடி கொண்டவன், என்று ரிக் வேதத்தின் பிற்கால சூக்தங்கள் வருணிக்கின்றன.
 
சிவ வழிபாட்டின் மகிமையை முதல் முதலாக உணர்த்திய தனி நூல் சுவேதா சுவேதர உபநிஷதமாகும். ருத்திரனின் பேராற்றல்களை வருணிக்கும் அந்நூல் ருத்திர சிவவழி பாட்டுக்கு ஒரு திறவுகோல் எனலாம்.  
 
சுக்லயஜுர் வேதத்தில் சிவனின் நூறு நாமங்கள் கூறப்பட்டிருக்கின்றன. யஜூர்வேதம், நம சிவாய என்று முழங்குகிறது. பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யம் சிவனின் பெருமையையும் சிவனடியார் இயல்புகளையும் சுவைபடச் சித்தரிக்கிறது.
 
வியாசர் அருளிய சிவபுராணம் ஆதிசங்கரரின் சிவாநந்தலகிரி, அப்பைய தீட்சதரின் சிவார்க்கமணி, தீபிகா ஆகியவை ஒப்பற்ற சிவபக்தி நறுமலர்கள்.
 
சிவபெமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும், பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்தப் பேரொளிப் பழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம்.