புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் ஏன் ? எதற்காக?
புரட்டாசி மாத விரதம் செல்வம், ஆயுள், ஆரோக்கியம், ஆகிய நற்பலன்களையும் தருகின்ற விரதமாகும். ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும்.
புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன் ஆவார். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் புரட்டாசி மாதம் முழுவதுமே அசைவத்தை விலக்குவது நல்லது. இயலாதவர்கள் சனிக்கிழமை அன்று மட்டுமாவது அசைவம் சாப்பிடாமல் இருக்கலாம்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய என்ற திரு மந்திரத்தை ஓதி வழிபட வேண்டும். அன்று ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்வது நல்லது. மாலையிலும் நீராடி பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடுகள் செய்ய வேண்டும். பெருமாளை வழிபடுபவர்கள் புரட்டாசி மாதம் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் வீட்டில் தளிகை போடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இந்த புரட்டாசி மாதத்தில் தட்பவெப்பநிலை தீடீர் மாறுதல்களால் மக்களுக்கு கடும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதனை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் துளசியை தண்ணீரில் கலந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கி வந்தனர். துளசியானது நோய்கிருமிகளை கட்டுபடுத்தும் வல்லமை கொண்டது. எனவே இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் விரதத்தை கடைப்பிடித்தனர்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிகத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.