செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 ஜூன் 2025 (18:30 IST)

நாளை அரிதாக வரும் 'புதாஷ்டமி' தினம்.. எப்படி விரதம் இருக்க வேண்டும்?

நாளை அரிதாக வரும் 'புதாஷ்டமி' தினம்.. எப்படி விரதம் இருக்க வேண்டும்?
அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் 8வது திதி 'அஷ்டமி'. இந்த அஷ்டமி புதன்கிழமையில் வந்தால், அதுவே 'புதாஷ்டமி' எனப்படும். நாளை  அதாவது ஜூன் 18, புதன்கிழமை இந்தச் சிறப்புமிக்க புதாஷ்டமி தினம். அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் இந்த நாள், வழிபாட்டிற்கு உகந்த விரத தினமாகக் கருதப்படுகிறது.
 
பொதுவாக, அஷ்டமி திதிகள் காளி, துர்க்கை, பைரவர் போன்ற தெய்வங்களுக்கு உகந்தவை. குறிப்பாக, பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பானது. நாளை புதாஷ்டமி விரதம் இருந்தால், தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும், நல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. அஷ்டமாதர்களை வழிபடுவதற்கும் இந்த புதாஷ்டமி சிறந்த தினமாகக் கருதப்படுகிறது.
 
இந்த நாளில், இயன்றவரை பானகம், வெல்லம் போன்றவற்றை உண்டு உபவாசம் இருக்கலாம். மாவிலையில் கற்கண்டு கலந்த அன்னத்தை நிவேதித்து, அஷ்டமாதர்களான பிராமி உள்ளிட்டோரை வழிபட வேண்டும். இந்த அன்னத்தைத் தானம் செய்வதால், அறிவாற்றல் பெருகும்; மூளை பலம் உண்டாகும்; முன்னோர்களின் ஆசிகள் கிட்டும். எழுதுபொருட்களை தானம் செய்வது வித்யா கடாட்சத்தை வழங்கும்.
 
அசோக மரத்தைப் புனிதமாகக் கருதும் புதாஷ்டமி நாளில், ஆலயங்களில் உள்ள அசோக மரத்தைத் தரிசிப்பது விசேஷமானது. சகல புண்ணிய பலன்களையும் அள்ளித்தரும் இந்த நாளில், சிவாலய வழிபாடு மேற்கொண்டு அளப்பரிய நற்பலன்களைப் பெறலாம். 
குறிப்பாக, பெண்கள் ஸ்ரீ கால பைரவரை வணங்கி, ஐந்து வகை எண்ணெய்களை (நல்லெண்ணெய், இலுப்பை, விளக்கெண்ணெய், பசு நெய், தேங்காய் எண்ணெய்) தனித்தனி அகலில் ஏற்றி வழிபடுவது சிறந்தது. இது தீர்க்க முடியாத தொல்லைகளை நீக்கும். சிவனின் ருத்ர அம்சமான பைரவரை வடகிழக்கு நோக்கி வழிபட்டால் உடனடியாக அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். பயம் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். அஷ்ட சித்திகளையும் தரும் பைரவரை புதாஷ்டமி நாளில் வழிபடுவது இரட்டிப்பு பலனைத் தரும்.
 
Edited by Mahendran