திருப்பாவை பாசுரம் பாடல் 19


ஸ்ரீ.ஸ்ரீ.| Last Modified திங்கள், 4 ஜனவரி 2016 (05:00 IST)
திருப்பாவை பாடல் 19
 
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
கண்ணனை அழைத்தும் பதில் வராததால், மறுபடியும், நப்பின்னையை வேண்டுவதாக அமைந்த பாடல்.
 
யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களை உடைய கட்டிலில், மிகவும் மென்மையான பஞ்சு மெத்தையின் மேல் ஏறி, கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களை அணிந்த கூந்தலைக் கொண்ட நப்பின்னையை நெஞ்சோடு அணைத்தபடி உறங்கும் பரந்த மார்பை உடையவனே! கண்ணா! வாய் திறந்து பேச மாட்டாயா? 
 
மை தீட்டிய விசாலமான கண்கள் கொண்ட நப்பின்னையே! எவ்வளவு நேரமானாலும், கண்ணனைத் தூக்கத்தில் இருந்து, எழுந்திருக்க விட மாட்டேன் என்கிறாயே! கொஞ்ச நேரம் கூடக் கண்ணனின் பிரிவைத் தாங்க முடியாதவளாக இருக்கிறாயே! இப்படிச் செய்வது உன் வடிவத்திற்கும், உன்னுடைய கருணைக்கும் ஒத்தாக இல்லை. (பஞ்ச சயனம்: அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், வெண்மை- என்னும் ஐந்தையும் உடைய படுக்கை -எனவும் கூறுவதுண்டு).
 
                                                                                           விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.


இதில் மேலும் படிக்கவும் :