1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 19 மார்ச் 2025 (18:57 IST)

திருப்பரங்குன்றம் கோவிலில் தேர்த்திருவிழா.. அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்..!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் இந்த தலம், வருடந்தோறும் பங்குனி பெருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழா, மார்ச் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
விழாவை முன்னிட்டு, முருகப்பெருமான் தெய்வானையுடன் தினமும் காலை பல்லக்கிலும், மாலை நேரங்களில் தங்கமயில், தங்கக்குதிரை, பூத, அன்ன, சேஷ போன்ற வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 16ஆம் தேதி மாலை கோவில் முன்பாக சூரசம்காரம் நடைபெற்றது. அதேபோல், முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக, முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. மதுரையிலிருந்து சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் வருகைதந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.
 
நள்ளிரவில், மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கு வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் தெய்வானையுடன் அம்பாரி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார்.
 
இன்று அதிகாலை 4 மணிக்கு, உற்சவர் சன்னதியில் முருகன், தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. காலை 6.40க்கு, வெட்டி வேரால் செய்யப்பட்ட மாலையணிந்த முருகப்பெருமான் தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் "அரோகரா!" கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
 
Edited by Mahendran