தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் புஷ்ப அங்கி சேவை.. குவிந்த பக்தர்கள்..!
தென் தமிழகத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற வைணவ தலங்களில் ஒன்று, திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடநாதபுரத்தில் இருக்கும் வெங்கடாஜலபதி கோவில். பக்தர்களால் "தென் திருப்பதி" என்று அழைக்கப்படும் இந்த கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சிறப்புமிக்க புஷ்ப அங்கி சேவை புரட்டாசி மாத பிறப்பன்று நடைபெற்றது.
3000 கிலோ எடையுள்ள, பல நூற்றாண்டுகள் பழமையான வெண்கல கருட வாகனத்தில், வெங்கடாஜலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வாசனை மலர்களால் ஆன புஷ்ப அங்கி சேவையில் சுவாமி காட்சியளித்தார்.
இதை தொடர்ந்து, பல்வேறு சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பிறகு, கருட வாகனத்திற்கு செங்கோல் மரியாதை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. மீண்டும் கருட பகவானுக்கு செங்கோல் வழங்கி, தீபாராதனை நடைபெற்றது.
ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Edited by Mahendran