திருவண்ணாமலைக்கு இணையான கோவை தர்மலிங்கேஸ்வரர் கோயில் கிரிவலம்.. என்னென்ன சிறப்புகள்?
திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக, பௌர்ணமி கிரிவலம் செல்ல அதிக பக்தர்கள் கூடும் தலமாக, கோவை மதுக்கரையில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் கிரிவலம் சென்றால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலையில் தினமும் கிரிவலம் செல்லலாம். ஆனால், தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் யானை போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக பௌர்ணமி அன்று மட்டுமே கிரிவலம் செல்ல வனத்துறை அனுமதி வழங்குகிறது.
4 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தக் கிரிவல பாதையில், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என எட்டு அஷ்ட லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்த லிங்கங்களை தரிசித்தபடியே பயணிக்கிறார்கள்.
தொடர்ந்து மூன்று பௌர்ணமிகளுக்கு கிரிவலம் வந்தால், மன அழுத்தம், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் கோவை, திருப்பூர், சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
Edited by Mahendran