வில்வத்தை கொண்டு பிரதோஷ நாளில் வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!
பிரதோஷ வழிபாட்டின் சிறப்பே 'துன்பத்திலிருந்து விடுதலையாவதுதான்.' தேவர்களைப் போலவே நாமும் அன்றாடம் ஆசைகளினால் அல்லல்படுகிறோம். துன்பம் ஒரு விஷம் போல நம்மைச் சூழ்ந்து பயமுறுத்துகிறது. அதிலிருந்து நாம் வெளியேற நமக்குக் கிடைத்திருக்கும் அருமருந்தே பிரதோஷ வழிபாடு.
நம்பியவருக்கு ஈசன் அருளும் வேளை பிரதோஷ வேளை. தோஷங்கள் யாவும் அண்டும் வேளையில், நாம் ஈசனின் சந்நிதியில் இருக்க வேண்டும் என்பதே இந்த பிரதோஷ வழிபாட்டின் நோக்கம்.
ஒரு மாதத்தில் வரும் இரு பிரதோஷ தினங்களிலும், சிவ ஆலயங்களுக்குச் சென்று நந்தி தேவரை முதலில் வழிபட்டு, பின் 'சோம சூக்த பிரதக்ஷணம்' செய்து, பின் நந்தியின் கொம்புகளின் வழி ஈசனை வழிபட வேண்டும்.
நந்தி, தர்மத்தின் வடிவம். அதனால்தான் ஈசனை வழிபடும் போது தர்மத்தின் பின் நின்றே பேச வேண்டும் என்பது அதன் தத்துவம். ஈசனையும் நந்தியையும் அர்ச்சிக்க உகந்தவை வில்வ இலைகள். அந்த வில்வ இலைகளைக் கொண்டு பிரதோஷ நாளில் வழிபட வேண்டும்.
'த்ரிஜன்ம பாப சம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்' என்கிறது வில்வாஸ்டகம். அதாவது 'மூன்று ஜன்மங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு வில்வ இலையை பக்தியோடு பரமனுக்குப் படைப்பதன் மூலமே தீர்ந்துவிடும்' என்பது இதன் பொருள்.
'ஈசன், வில்வ இலைகளையும் வில்வக் காடுகளையும் விரும்புகிறவன்' என்று புராணங்கள் கூறுகின்றன. வில்வம் அன்னை மகாலட்சுமியின் அம்சம். பாற்கடலில் அன்னை மகாலட்சுமி அவதரித்த போது, அவரின் திருக்கரங்களில் வில்வ இலை இருந்தது என்று வராக புராணம் சொல்கிறது.
வில்வ இலைகள், 'இச்சா சக்தி', 'கிரியா சக்தி', 'ஞான சக்தி' ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டவை. சௌபாக்கிய சஞ்சீவினி என்னும் நூலும், காளிகா புராணமும் மகாலட்சுமித் தாயார் வில்வக் காட்டில் தவம் செய்பவள் என்று சொல்கின்றன. எனவே வில்வத்தில் அன்னை மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்றே நம்பப்படுகிறது.
Edited by Sasikala