வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:12 IST)

புத்திர பாக்கியம் உண்டாக்கும் நாகபஞ்சமி விரதம்!!

ஆடி மாதம் சுக்ல பஞ்சமியில் நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாதமும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதேபோல், சுக்ல பஞ்சமியில் கருட விரதத்தைத் தொடங்க வேண்டும். 

 
ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்கு ஒரு வாரத்துக்குமுன், இப்பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த இரு பண்டிகைகளும், சகோதரர்களின் நலத்தை விரும்பி, சகோதரர்களும், சகோதரிகளும் கொண்டாடும் இரு முக்கிய பண்டிகைகளாகும். 
 
சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. 
 
பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து  இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக  பஞ்சமி தினம். 
 
இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன்  வாழ்வார்கள்.விரதம் கடைப்பிடிக்கும் போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு  கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.