1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (00:33 IST)

யோகக் கலையில் மிக முக்கியமான சூரிய நமஸ்காரம் .....!

யோகக் கலையில் மிக முக்கியமானது சூரிய நமஸ்காரம் நல்ல பன்னிரண்டு ஆசனங்களின் அற்புதமான தொகுப்பே சூர்ய நமஸ்காரம். தனித்தனியாக ஆசனங்களை செய்வதைவிட, சூர்ய நமஸ்காரம் செய்தாலே 12 விதமான ஆசனங்களின் பலன் கிடைத்துவிடும்.
 
சூர்ய நமஸ்காரம்:
 
1. நமஸ்கார் முத்ரா: முதலில் நேராக நின்றுகொண்டு, மார்புக்கு நேராக இரு கைகளையும் குவித்த நிலையில் நமஸ்கார முத்திரையில்  வைக்க வேண்டும்.
 
2. ஊர்த்துவாசனம்: பிறகு கைகளை மெதுவாக உயர்த்தி, சற்று பின்னோக்கி வளைய வேண்டும்.
 
3. பாத ஹஸ்தாசனம்: பின்னர், முன்னோக்கி வளைந்து, கீழ்நோக்கி குனிந்து முட்டியை மடக்காமல், இரு கைகளாலும் இரு பாதங்களையும்  தொடவேண்டும்.
 
4. அஷ்வ சஞ்சலாசனம்: அடுத்து, ஒரு காலை மட்டும் பின்னோக்கி நீட்டி, முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.
 
5. மேரு ஆசனம்: அடுத்து, இன்னொரு காலையும் பின்னோக்கி கொண்டு சென்று, முதுகை உயர்த்தி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கால் பாதங்கள் இரண்டும் தரையில் நன்கு பதிந்திருக்க வேண்டும்.
 
6. அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்: பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவதுபோல படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளும் மார்புக்கு பக்கவாட்டில் வைக்கவும்.இதன் பெயர் அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்.
 
7. புஜங்காசனம்: பிறகு, இரு கைகளையும் மார்புக்கு இணையாக தரையில் ஊன்றி, தலையை மட்டும் மேலே தூக்கிப் பாம்பு படமெடுப்பது போல்பார்க்க வேண்டும் இது புஜங்காசன நிலை.
இந்த நிலையில் இருந்து, மீண்டும் படிப்படியாக 6,5,4,3,2,1 என அஷ்டாங்க பூமி ஸ்பரிசம், மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலாசனம், பாத  ஹஸ்தாசனம், ஊர்த்துவாசனம் என ஒவ்வொரு ஆசனங்களாக பிறகு, இறுதியாக நமஸ்கார் முத்ரா நிலையில் நின்று, கைகளைத் தொங்க  விட வேண்டும்.
மேற்கண்ட 12 ஆசனங்களையும் வலது பக்கம் ஒரு முறை, இடது பக்கம் ஒரு முறை செய்வது, ஒரு சுற்று சூர்ய நமஸ்காரம். ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்து செய்து, பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை 5, 7, 9, 12  என அதிகரிக்கலாம்.12 முறைக்கு மேல் சூர்ய நமஸ்காரம்  செய்ய வேண்டாம்.
யார் சூரிய நமஸ்காரம் செய்யக்கூடாது?
 
கர்ப்பிணிகள், தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், இதய நோய், மூட்டு வலி, கழுத்துவலி, ஸ்பாண்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூர்ய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது.
 
நாம் தினசரி தொடர்ந்து சூரிய நமஸ்காரங்கள் செய்து வந்தால் நோய் நொடிகள் நீங்கி நமது மனமும் உடலும் சூரியனைப் போல பிரகாசிக்கும்.