மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் மன அழுத்தம் மற்றும் உடல் வலி சோர்வுடன் இருப்பதால் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதில்லை. ஆனால் மாதவிடாய் காலங்களில் நடை பயிற்சி செய்வது மனநிலை மேம்பாட்டுக்கு உதவும் என்றும், மன அழுத்தம் குறையும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பெண்கள் மாதவிடாய் காலங்களில் நடைப்பயிற்சி செய்வது மட்டுமின்றி எளிமையான சில உடற்பயிற்சிகளும் செய்யலாம் என மகளிர் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மிகவும் கவனமாக நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மாதவிடாய் காலங்களில் நடைப்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் மேம்படும் என்றும், ரத்த போக்கை திறம்பட நீக்குகிறது என்றும், உடல் வீக்கம் ஏற்படுவதை தடுப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
மாதவிடாய் காலங்களில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பதால் மன அழுத்தம், எரிச்சல் ஏற்படும். இந்த நாட்களில் நடை பயிற்சி மற்றும் எளிமையான உடற்பயிற்சி செய்தால் மன அழுத்தம் குறையும். வீட்டுக்குள்ளே இருப்பதை விட பூங்கா, வயல்வெளி போன்ற இடங்களில் நடைப்பயிற்சி செய்வது மேலும் பலன்களை தரும்.
இவ்வாறு நடைப்பயிற்சி செய்வது மாதவிடாய் காலங்களில் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் பெரிதும் உதவியாக அமைகிறது.
Edited by Mahendran