டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்
டெங்கு காய்ச்சல் என்பது தொற்று நோய்ப் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.
டெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது. ஆனால் டெங்கு பாதிப்பு இருக்கும் ஒருவரை கடித்த கொசு இன்னொருவரை கடிக்கும் போது அவருக்கும் டெங்கு பாதிப்பு வரக்கூடும்.
ஏடிஸ் கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கக்கூடியது. அதனால் இரவில் தூங்கச் செல்லும் போது கொசுவலை போட்டுக் கொள்வதை காட்டிலும் பகல் நேரங்களிலும் கவனமாக இருப்பது அவசியமாகும்.
டெங்கு காய்ச்சலில் நான்கு வகை இருக்கிறது. அவற்றில் முதல் வகை டெங்கு காய்சல் மட்டும் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வருவது. மற்றவை பின்னாட்களில் உங்களுக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது.
காய்ச்சல் குறைந்ததும் உடலிலிருந்து டெங்கு வைரஸ் போய்விட்டது என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இதற்குப் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும்.
டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு டெங்கு ஷாக் சிண்ட்ரோம் என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்களுக்குக் கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.
டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.