இங்கிலாந்தின் அதிர்ச்சி தோல்வியும் குரேஷியாவின் சாதனை வெற்றியும் - 8 தகவல்கள்
புதன்கிழமை இரவு இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தந்த இரவாக மாறிப்போக இன்னொருபுறம் குரேஷியா ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது.
உலககோப்பை கால்பந்து 2018-ல் அரை இறுதி சுற்றில் குரேஷியாவும் இங்கிலாந்தும் மோதின. இப்போட்டியில் குரேஷியா 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் கோல் இங்கிலாந்தால் அடிக்கப்பட்டது. எனினும் இரண்டாவது பாதியில் குரேஷியா ஆட்டத்தை சமன் செய்தது. கூடுதல் நேரத்தில் குரேஷியா வெற்றிக்கான கோலை உதைத்து இங்கிலாந்தின் அரை இறுதி கனவை சிதறடித்தது.
1. மிகப்பெரிய அளவிலான கால்பந்து கோப்பைத் தொடர்களில் இதுவரை ஐந்து முறை இங்கிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரோஷியாவோடு இம்முறை தோல்வியடைந்ததோடுச் சேர்த்து நான்கு முறை அரை இறுதியில் தோல்வி கண்டுள்ளது.
1963 யூரோ கோப்பை அரை இறுதியில் யுகோஸ்லேவியாவிடம் தோற்றது. 1990 உலக கோப்பை அரை இறுதியில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. 1996 யூரோ கோப்பை அரை இறுதியிலும் ஜெர்மனியிடமே இங்கிலாந்து தோற்றது. தற்போது குரேஷியாவிடம் தோற்று வெளியேறியுள்ளது.
2. இதுவரை ஐந்து முறை உலககோப்பையில் விளையாடியுள்ள குரோஷியா முதல்முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
3. இந்நூற்றாண்டில் குரேஷியாவுக்கு எதிராக முக்கியத் தொடர்களில் இதுவரை மூன்று முறை தோல்விகண்டுள்ளது இங்கிலாந்து.4. உலக கோப்பை போட்டியொன்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூடுதல் நேரம் வரை ஆட்டம் நீண்டும், அதில் கடைசி நேரத்தில் வெற்றிக்கான கோல் அடித்த பெருமை குரேஷியாவின் மரியோ மண்ட்ஜூகிக்குக்குச் சேரும். நேற்றைய தினம் ஆட்டத்தின் 108-வது நிமிடம் மூன்றாவது நொடியில் அவர் வெற்றிக்கான கோலை அடித்தார்.
5. உலகக்கோப்பையில் டேவிட் பெக்காமுக்கு பிறகு ஃப்ரீ கிக்கில் நேரடியாக கோல் போட்ட இங்கிலாந்து வீரராகியுள்ளார் கியாரன் ட்ரிப்பியர். இதற்கு முன்னதாக ஈக்வடார் அணிக்கு எதிராக 2006-ல் பெக்காம் கோல் அடித்தார்.
6. உலக கோப்பை அரை இறுதி போட்டியில் 1958க்கு பிறகு மிகவிரைவாக அடிக்கப்பட்ட கோல் ஆகியுள்ளது ட்ரிப்பியரின் கோல். முன்னதாக பிரேசில் - பிரான்ஸ் அணிகள் 1958-ல் மோதிய அரை இறுதியில் வாவா எனும் வீரர் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திற்கு பிறகு கோல் அடித்தார். ட்ரிப்பியர் நான்காவது நிமிடம் 44-வது நொடியில் கோல் அடித்துள்ளார்.
7. 1990 உலக கோப்பையில் இங்கிலாந்து மூன்று முறை தொடர்ச்சியாக கூடுதல் நேரத்தில் விளையாடியது. அதன்பின்னர் குரேஷியாதான் இம்முறை தொடர்ச்சியாக மூன்று முறை கூடுதல் நேரத்தில் விளையாடியுள்ளது.
8. உலககோப்பை 2018-ல் ஐந்து முறை ஆட்டம் கூடுதல் நேரம் வரை நீண்டது. இதில் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அல்லது குரேஷியா இருந்தது. ஸ்பெயின் மற்றும் ரஷ்யா இடையிலான ஆட்டம் மற்றொன்றாகும்.
இங்கிலாந்து சனிக்கிழமையன்று மூன்றாவது/நான்காவது இடத்திற்கான ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. ஞாயிற்றுகிழமை நடக்கும் இறுதிப் போட்டியில் குரேஷியாவை எதிர்கொள்கிறது ஃபிரான்ஸ்.