4963 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

Lenin AK| Last Updated: செவ்வாய், 14 அக்டோபர் 2014 (16:39 IST)
நில அளவர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4963 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 தேர்வுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இளநிலை உதவியாளர் (பிணையம்) (39), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133), வரித் தண்டலர் (22), தட்டச்சர் (1683), சுருக்கெழுத்து தட்டச்சர் (331), மற்றும் நில அளவர் (702), வரைவாளர் (53) என மொத்தத்தில் 4,963 காலிப்பணியிடங்கள் ஆகும்.

இந்த தேர்விற்கு குறைந்தப்பட்சக் கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும். குறைந்தபட்ச வயது 18ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டிய கடைசித் தேதி நவம்பர் 12 ஆகும். கட்டணம் செலுத்தக் கடைசி நாள் நவம்பர் 14 ஆகும். தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி காலை நடைபெற உள்ளது.
மாவட்டத் தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள் உள்ளிட்ட 244 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற தேர்வாணைய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

நிரந்தரப் பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். நிரந்தர பதிவில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படத் தகுதியானவர்கள் ஆவர். மற்றவர்கள் அந்தந்த வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். பணம் செலுத்திய ரசீதை விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். இணையத்தின் மூலமாகவும் செலுத்தலாம்.
இதுகுறித்த சந்தேகங்களை 044 - 25332855, 044 - 25332833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1002 இல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.


இதில் மேலும் படிக்கவும் :