தனிப்பெரும்பான்மையை நெருங்கும் பாஜக - பிரதமராகிறார் மோடி

வீரமணி பன்னீர்செல்வம்| Last Updated: வெள்ளி, 16 மே 2014 (13:27 IST)
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால், கூட்டணி கட்சிகளின் துணையின்றியே பாஜக ஆட்சியமைக்கும சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் இந்தத் தேர்தலில் படுதோல்வியை சந்திக்கிறது. மூன்றாவது அணியும், காங்கிரஸும் இணைந்தால்கூட எட்ட முடியாத அளவில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
 
இன்று முற்பகல் 11.30 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 336 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டும் தனித்து 280 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால், தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைத் தாண்டிவிடும் சூழல் நிலவுகிறது.
 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 63 இடங்களிலும், இதர கட்சிகள் 146 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணியே பெரும்பான்மை பெறும் என்று கூறின. ஆனால், பாஜக தற்போது தனித்துப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது.
 
பத்து ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ஊழல் உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியும், மோடியும் அலையுமே இந்த மாற்றத்துக் காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
 
தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :