ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

பெருங்காயத்தின் மருத்துவக் குணங்கள்

பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகிறோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.


 
 
பெருங்காயம், உஷ்ணத்தைத் தரக்கூடியது; உணவை செரிப்பிக்கிறது. சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மையானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத்தையும், கபத்தையும் கண்டிக்கிறது. பித்தத்தை உயர்த்துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின் சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
 
உபயோகங்கள்: 
 
இது ஒரு நல்ல வாய்வகற்றி. உணவுப் பொருள்களைச் ஜீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகிறது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இருமலுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், நீக்குகிறது. 
 
சுவாச நோயிலும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
 
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலிப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளிலும் மிகவும் பயனுடையதாகிறது.
 
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை (பெருங்காயத்தை) எண்ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற்கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
 
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சையாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும். இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம். அல்லது சாதத்தின் உள்ளே வைத்து அப்படியே சாப்பிட பலன் கிடைக்கும்.
 
கோழி முட்டை மஞ்சள்கருவுடன் காயத்தைக் கூட்டிக் கொடுக்க வறட்டிருமல், பக்க வலி நீங்கும். எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.