1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. திவாகர்
Last Updated : திங்கள், 13 அக்டோபர் 2014 (13:37 IST)

ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் - ஒரு நேரடி அனுபவம்

(விசாகப் பட்டினத்தில் வசிக்கும் எழுத்தாளர் திவாகர், புயலின் ஆவேசத்தையும் அது ஏற்படுத்திய சேதங்களையும் நேரடியாக, வெப்துனியாவுக்காகப் பதிவு செய்துள்ளார்) 
 
ஹூட் ஹூட் எனும் அரபிச் சொல் ஒரு பறவையின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட சொல் என்பார்கள்.. அதுவும் அழகான வண்ணமய சிறகுகள் கொண்ட பறவையாம் அது.. ஆனால் சிறகுகளையெல்லாம் பிய்த்துப் போட்டு, அந்தப் பறவையையும் எலும்புக் கூடாக மாற்றித் தன்னந்தனியே வீதியில் எறிவது போல அழகான விசாகப்பட்டின நகரைப் பிய்த்துப் புரட்டிப் போடுவதைப் போல, எறிந்துவிட்டது, இந்த ஹூட் ஹூட் புயல்.
 
ஓய்வு பெற்றோரின் உல்லாச நகரம் விசாகப்பட்டினம் என்பார்கள். பூங்கா நகரம் என்பார்கள். துறைமுக நகரம் என்பார்கள்.. ஊர்சுற்றிப் பார்க்க உகந்த நகரம் என்பார்கள்.
ஆனால் இப்போது மட்டும் ஊர்சுற்றினால் இந்த நகரத்தை நம் கண்ணீரால்தான் கழுவ முடியும்.. எங்கு பார்த்தாலும் இடிந்த மரங்கள், நொறுங்கித் தொங்கும் மின்சாரக் கம்பங்கள். உணவுக்கு ஆலாய்ப் பறக்கும் ஏழை ஜனங்கள். வானெங்கும் சுற்றித் திரியும் காகங்கள், குருவிகள், பறவைகள்..


மேலும்


 
 

இன்று நிச்சயமாக விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. இந்த முன்னேறிய விஞ்ஞானத்தால்தான் பல இன்னுயிர்கள் சேதப்படாமல் காப்பாற்றப்படுகின்றன. நான்கு நாட்கள் முன்னமேயே இந்த நாளில் இந்த நேரத்தில் இந்தக் கடற்கரையின் இந்தப் பகுதியை இந்தப் புயல் தாக்குகிறது என்பதை நம்மால் கணிக்க முடிகிறது. இப்படிக் கணிக்கப்படுவதால் முன்கூட்டிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அதனால் கடற்கரை அருகே பல மனித உயிர்கள், கால்நடைகள் காப்பாற்றப்படுகின்றன. இப்படித்தான் கடந்த ஆண்டு ‘பைலின்’ புயலால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. இதே போன்ற நடவடிக்கையினால் இந்த முறையும் ஹூட் ஹூட் புயலினால் மானிட உயிருக்குப் பெரும் பங்கமில்லாமல் காப்பாற்றப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை.


 
ஆனால் இந்தப் புயல், தன் கோபத்தை இயற்கைச் செல்வங்களைப் பரிபூரணமாக அழித்து அதன் மூலம் தன் வெறியைத் தணித்துக்கொண்டது. 



பத்தடி இடைவெளியில் இருக்கும் ஒவ்வொரு மரத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டது.
மேலும்

சிமெண்ட் கலவையால் கட்டப்பட்ட மின்சாரக் கம்பங்கள் அதன் பலம் முன்னே நிற்காமல் உடைந்து போய் விழுந்தன. ஓலைக் குடிசைகள் அவ்வளவாக இல்லையென்றாலும் இருக்கும் ஓட்டுக் குடிசைகளின் மேல்தளங்கள் காற்றோடு பறந்து ஓடின. 

 
மேல் தளத்து ஓடுகள் எல்லாம் படபடவென சப்தத்துடன் ஒடிந்து விழும் சப்தத்தை, விமான நிலைய ஊழியர்கள், ஏதோ பிரளய காலத்து நிகழ்ச்சியாக நினைத்துவிட்டனராம். மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் வீசும் காற்றோடு மனிதன் போட்டி போட முடியுமா? மனிதன் தன்னை வேண்டுமானால் காப்பாற்றிக்கொள்ள முடியும், ஆனால் அவன் நிர்மாணித்தவை இந்த வாயு பகவானின் வேகத்துக்கு முன்னே நிற்காது என்பது போல இருந்தது காற்றின் சுழற்சி.


 
ஏற்கனவே 1979ஆம் ஆண்டில் மிகப் பெரிய புயலின் விளைவாக ஆந்திரத்தில் லட்சக்கணக்கில் திவிசீமா எனும் பகுதியில் மக்கள் மரணமுற்ற அவலத்தைப் பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு மிகப் பெரிய அளவிலான புயல் ஒன்றைக் காணுவதும் அதை நேரடியாக அனுபவிப்பதும் வாழ்க்கையில் கிடைத்த ஒரு அற்புதமான அவகாசம்தான். இயற்கையின் அழகை நம்மால் முழுமையாக வார்த்தையில் வர்ணிக்கவே முடியாது. அதன் அழகை அனுபவிப்பதிலும் நம்மால் திருப்தியை அடைய முடியாதுதான். அதே விதத்தில் இயற்கையின் இன்னொரு பக்கமான இந்தச் சீற்றத்தைக் கூட அனுபவித்தவர்களால் வார்த்தைகளாக விவரிக்க முடியாதுதான்.. 
 
’நான் அழகு இருந்தாலும் மிகப் பெரிய ஆபத்தும் கூட’ என்று சொல்லிவிட்டுச் சென்ற இயற்கையின் ஒரு அம்சமான ஹூட் ஹூட், இனி மறுமுறை திரும்ப வரவேண்டாம்.. வாழ்க்கையில் ஒரு அனுபவம் போதும்.
 
படங்கள்: திவாகர்