1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (17:47 IST)

மரணிக்கும் காவிரி விவசாயிகள்: இதயமற்ற ஆட்சியாளர்கள்!

நவநீதன் என்றொரு விவசாயி. தனது 70 வயதையும் வயலில் கழித்தவர். நாகை மாவட்டத்தின் கீழகாவல்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். திங்கள் இரவு இதயச் செயலிழப்பினால் மரணித்தார். அவரது நிலத்தில் அவர் விதைத்திருந்த சம்பா பயிர் காய்ந்துபோனதால் அவர் இதயம் தவியாய் தவித்து பின்னர் நின்றுபோய்விட்டது.


 

அவர் தமிழக அரசின் அறிவுரையின் படி நேரடி விதைப்பு செய்திருந்தார். ஆனால், விதை முளைக்கவில்லை. எந்த விவசாயப் பொருள் கடையில் விதை வாங்கினாரோ? இப்போதெல்லாம் விவசாயிகள் கையில் விதை நெல் இருப்பதில்லை.

அதன்பின் அருகாமை நிலத்துண்டு ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து நாற்றங்கால் அமைத்திருக்கிறார். மறுபடியும் விதைத்திருக்கிறார். விதை முளைக்க நீர் வேண்டுமே? பக்கத்து குட்டையில் இருந்த நீரைப் பாய்ச்சி விதை முளைக்கக் காத்திருந்திருக்கிறார்.

நாற்றுக்களை 30 நாட்களில் பறித்து வயலில் நடவேண்டும். ஆனால், குட்டையின் நீர் காய்ந்துவிட்டது. காவிரி நீர் இன்னும் அவர் ஊருக்குப் போய்ச் சேரவில்லை. மருவத்தூர் மதகு வாய்க்கால்தான் அவர் ஊருக்கு நீர் அளிக்க வேண்டும். பராமரிப்பு இல்லாத வாய்க்காலில் நீர் ஓட்டம் போதவில்லை. நீர் பாய்ச்ச வேறு வாய்ப்பில்லை.

மனம் தளராத நவநீதன் வடகிழக்குப் பருவ மழைக்காகக் காத்திருந்தார். சூரியனுக்கு கோபம் வந்து பூமி கொதிக்கும் இந்த நாளில், பருவமழைகள் தவறிப் போகும் என்பதை ஒருவேளை அவர் அறியாதிருந்திருக்கலாம். ஜெயலலிதா போன்ற படிப்பாளி - அரசியல்வாதிகளுக்கே தெரியாத உண்மை ஏழை விவசாயிக்கு எப்படித் தெரிந்திருக்கும்?


 

நாற்றுகள் அடிக்கும் பருவநிலை மாற்ற வெய்யிலில் கருகிப் போய் கொண்டிருந்த நாட்களில் வயலுக்குப் போய் மழை பெய்யும் எனக் காத்திருப்பது நவநீதனின் வழக்கமாயிற்று. இருந்தபோதும் அவர் பிறவி விவசாயி. எப்படியாவது விவசாயத்தைத் தொடருங்கள் என்று குடும்பத்தினரிடம் சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

திங்கள் முன்னிரவு நினைவிழந்த நிலையில் தந்தையைக் கண்டிருக்கிறார் நவநீதனின் மகன். ஆம்புலன்சை அழைத்திருக்கிறார்கள். ஆனால், நவநீதன் குடியிருந்தது கோபால புரத்திலோ அல்லது போயஸ் தோட்டத்திலோ அல்ல!

நவநீதனின் விவசாயக் குடிலுக்கு வரமுடியாது என்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிராதான சாலையில் வண்டியை நிறுத்திவிட்டார். மூன்று சக்கர வண்டியில் வைத்து தந்தையை ஆம்புலன்சிற்கு கொண்டு சென்றிருக்கிறார், நவநீதனின் மகன்.

மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, அவர் முன்னமேயே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விவசாயி உயிர்தானே.. கோடிகளைக் கொட்டி அந்த உயிரைக் காக்க வேண்டிய அவசியம் என்ன?

கட்டுரையாளார்: மதிவாணன் [CPI-ML மாவட்ட செயலாளர், மதுரை]